பொதுமக்களின் நடவடிக்கை குறித்து சுகாதாரத் துறையினர் கவலை
நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்ட பயணக் கட்டுப்பாடு நேற்று (25) அதிகாலை 4 மணி முதல் 19 மணித்தியாலங்களுக்கு தளர்த்தப்பட்டிருந்தது.
இந்நிலையில், நேற்றிரவு (25) 11 மணி தொடக்கம் எதிர்வரும் 31 ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை பயணக் கட்டுப்பாடு மீண்டும் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
மீண்டும் எதிர்வரும் 31 ஆம் திகதி அதிகாலை 4 மணிக்கு தளர்த்தப்படும் இந்த பயணக் கட்டுப்பாடு அன்றிரவு 11 மணி தொடக்கம் ஜூன் மாதம் 04 ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை தொடர்ந்தும் அமுலில் இருக்கும்
இதனைத் தொடந்து எதிர்வரும் ஜூன் மாதம் 4 ஆம் திகதி இரவு 11 மணிக்கு மீள அமுல்படுத்தப்படும் பயணக் கட்டுப்பாடு ஜூன் மாதம் 7 ஆம் திகதி வரை தொடர்ந்தும் அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, நேற்று (25) தற்காலிகமாக பயண தடை நீக்கப்பட்டதை தொடர்ந்து அதிகளவிலான மக்கள் பொருட்களை கொள்வனவு செய்வதற்காக நகரங்களுக்கு செல்வதை அவதானிக்க முடிந்ததாக எமது பிராந்திய ஊடக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சிலர் வில்பரோக் எனப்படும் தள்ளுவண்டியை எடுத்துச் சென்று பொருட்களை கொள்வனவு செய்து செய்து வீடு திரும்பும் காட்சியையும் அவதானிக்க முடிந்தது. கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்குடன் சுகாதாரத் துறையின் வழிகாட்டலுக்கு அமைய அரசாங்கம் பயணத்தடையை முன்னெடுக்கிறது. அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்காக அதிகளவிலான மக்கள் ஒரே இடத்தில் ஒன்று கூடுவது பற்றி சுகாதாரத்துறையினர் கவலை வெளியிட்டுள்ளனர்..
மக்களின் தேவை கருதியே பயணக் கட்டுப்பாடு தளர்த்தப்படுவதாகவும் பயணக் கட்டுப்பாடு நீக்கப்படவில்லை என்று கொவிட் 19 வைரஸ் தொற்று பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்..
மக்கள் தங்களின் வீடுகளுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை கொள்வனவு செய்வதற்கு மாத்திரமே ஒரு சில நாட்களுக்கு பயணக் கட்டுப்பாட்டை தளர்த்த தீர்மானித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
பயணக் கட்டுப்பாடு தளர்த்தப்படும் நாட்களில் வீடுகளில் இருந்து ஒருவர் மாத்திரம் வெளியில் சென்று, அத்தியாவசியப் பொருட்களை கொள்வனவு செய்யுமாறு இராணுவத் தளபதி கோரிக்கை விடுத்தார்.
பிரதேச செயலாளர்களினால் பரிந்துரைக்கப்பட்டுள்ள கடைகள் மற்றும் மருந்தகங்களில் தங்களுக்கு தேவையான பொருட்களை கொள்வனவு செய்ய முடியும் என இராணுவத் தளபதி கூறினார்.
வாகனங்களில் பயணிக்காது, நடந்து செல்லக்கூடிய தூரத்திலுள்ள வர்த்தக நிலையங்களுக்கு மாத்திரமே செல்ல வேண்டும் என்று தெரிவித்த இராணுவத்தளபதி பயணக் கட்டுப்பாடு தளர்த்தப்பட்டுள்ள காலப்பகுதியில் வங்கிச் சேவை முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் குறைந்தபட்ச ஆளணியைக் கொண்டு வங்கிச் சேவையை முன்னெடுக்க வேண்டும் என்றும் கூறினார்.
இதேவேளை, தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் பயணக் கட்டுப்பாடு தளர்த்தப்பட்டுள்ள காலப்பகுதியிலும் தங்களின் கிராமத்தை விட்டு வெளியில் செல்ல முடியாது என இராணுவத் தளபதி குறிப்பிட்டார்.
இதேவேளை, பயணக் கட்டுப்பாடு தளர்த்தப்பட்டுள்ள காலப்பகுதியில் ஆடை விற்பனை நிலையங்கள் உள்ளிட்ட ஆடம்பர தேவைகளுக்கான வர்த்தக நிலையங்கள் திறக்கப்படக் கூடாது மரக்கறி, மீன் கடை, இறைச்சிக் கடை மற்றும் அத்தியாவசியப் பொருட்களை விற்பனை செய்யும் வர்த்தக நிலையங்களை திறப்பதற்கு மாத்திரமே பயணக் கட்டுப்பாடு தளர்த்தப்படும் காலப்பகுதியில் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
இதனிடையே, பயணக் கட்டுப்பாடு விதிக்கப்படும் காலப்பகுதியில் விவசாய நடவடிக்கைகளை எவ்வித இடையூறுகளுமின்றி முன்னெடுக்க முடியும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.
விவசாய உற்பத்திகளை விற்பனை செய்வதற்கு நடமாடும் வர்த்தக சேவை முன்னெடுக்கப்படவுள்ளது. நடமாடும் வர்த்தக சேவைக்கு பிரதேச செயலகத்தால் வழங்கப்படும் அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்வது அவசியம்..
(அரசாங்க தகவல் திணைக்களம்)