தனது பெயரைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படுகின்ற போலி நடவடிக்கைகளில் ஏமாற வேண்டாம்
கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக வைத்தியசாலைகளுக்கு அவசர சிகிச்சைப் பிரிவு உட்பட வைத்தியசாலைகளுக்கு அவசரமாகத் தேவைப்படுகின்ற வைத்திய உபகரணங்களைப் பெற்றுத் தருவதற்காக ஒன்று சேருமாறு ஆரம்ப சுகாதார சேவைகள், தொற்று நோயியல் மற்றும் கொவிட் கட்டுப்பாட்டு இராஜாங்க அமைச்சர் சுதர்சனி பெர்னாண்டோபுள்ளே, அண்மையில் தனவந்தர்களிடம் விடுத்த கோரிக்கையை ஏற்றுக்கொண்டு முன்வந்த பல்வேறு நிறுவனங்கள் மற்றும் தனி நபர்களின் பங்களிப்பு குறித்து இராஜாங்க அமைச்சர் தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார்.
இதேவேளை சில நபர்கள் மற்றும் குழுக்கள் இந்த தொற்று நோய் பரவல் சூழ்நிலையில் அமைச்சரின் பெயரை பயன்படுத்தி போலி செய்திகளை வெளியிட்டு, வைத்தியசாலைகளுக்கு அவசியமான உபகரணங்கள் என பட்டியல் தயாரித்து நிதி வழங்குமாறு நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிய வந்துள்ளது.
"SriLanka unites" என்ற பெயரில் குறித்த குழுவொன்றினால் போலியான, வைத்திய உபகரணப் பட்டியலொன்று தயாரித்து அமைச்சரின் பெயரைப் பயன்படுத்தி ட்விட்டர் மற்றும் சமூக வலைத்தளங்களின் ஊடாக நிதி வழங்குமாறு கேட்டு பதிவிட்டுள்ள செய்தி தவறானது என்றும், இது தொடர்பாக நிதி நன்கொடைகள் அல்லது வைத்திய உபகரணங்களை வழங்க வேண்டாம் என்றும் அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும் இவ்வாறானதொரு கோரிக்கையை தான் அவர்கள் இடத்தில் முன்வைக்கவில்லை. இது தொடர்பாக விசாரணை செய்வதற்கு அவர்கள் குறிப்பிடப்பட்டுள்ள குறித்த தொலைபேசி இலக்கத்தின் ஊடாக பல தடவைகள் தொடர்பு கொண்டபோதும் தொடர்பு கொள்ள முடியவில்லை.
இந்த நேரத்தில், தேவைப்படுவது ஒரு நபரின் பெயரை விளம்பரப்படுத்துவதோ அல்லது ஒரு நிறுவனத்தை விளம்பரப்படுத்துவதோ அல்ல, மாறாக குறித்த மருத்துவமனையை தொடர்புகொண்டு தேவைகளுக்கேற்ப மருத்துவ உபகரணங்களை வழங்குவதாகும். அதற்காக தனது பெயரைப் பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை என்றும், உள்ளூர் மற்றும் வெளிநாட்டு தனவந்தர்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக மாத்திரமே தான் அவ்வாறு செய்ததாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
(அரசாங்க தகவல் திணைக்களம்)