சட்டவிரோதமாக மதுபான விற்பனையில் ஈடுபட்ட நபர் கைது
மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை முனைக்காடுப் பிரதேசத்தில் சட்டவிரோதமாக மதுபான விற்பனையில் ஈடுபட்டுவந்த நபர் ஒருவரை மட்டக்களப்பு மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு காவல்துறையினர் நேற்று (21) கைது செய்துள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி பி எஸ் .பி.பண்டார தலைமையிலான பொலிஸ் புலனாய்வு குழுவினரினால் இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த நபர் சட்டவிரோதமான முறையில் வீட்டில் மதுபான வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தவேளை 48 டின்கள் மற்றும் 9 போத்தல்களுடன் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தற்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகரித்துவரும் போதைவஸ்து பாவனைகள் மற்றும் போதைப்பொருள் விற்பனை தொடர்பில் மாவட்ட சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் சுகத் மாசிங்க முன்னெடுத்துள்ள நடவடிக்கையின் கீழ் மாவட்ட குற்றத்தடுப்பு விசாரணை பிரிவு தீவிர சுற்றிவளைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.