பண மோசடி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட வர்த்தகர் உள்ளிட்ட நால்வருக்கு விளக்கமறியல்

பண மோசடி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட வர்த்தகர் உள்ளிட்ட நால்வருக்கு விளக்கமறியல்

கொள்ளுப்பிட்டியில் அப்பல் வகை திறன்பேசிகள் மற்றும் ஐபேட் என்பவற்றை பெற்றுத்தருவதாக கூறி பெருந்தொகை பணத்தை மோசடி செய்ததாக தெரிவித்து கைது செய்யப்பட்ட வர்த்தகர் உள்ளிட்ட நான்கு பேர் எதிர்வரும் ஜுன் மாதம் 3ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கொள்ளுப்பிட்டியில் இலத்திரனியல் வர்த்த நிலையம் ஒன்றை நடத்தி வந்த இவர்கள், திறன்பேசிகளையும் ஐபேடையும் பெற்றுத் தருவதாக தெரிவித்து, சுமார் 100,000 ரூபாவுக்கும் அதிகமான தொகையை மோசடி செய்திருப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக குறித்த வர்த்தக நிலையத்தின் உரிமையாளர் உட்பட 4 பேர் இன்று கொள்ளுப்பிட்டி காவற்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

இதனையடுத்து அவர்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது, அவர்களுக்கு எதிராக 3000க்கும் அதிகமான முறைப்பாடுகள் கிடைக்கப்பெறவிருப்பதாகவும், நடமாட்டக் கட்டுப்பாடுகள் காரணமாக முறைப்பாடுகளை பதிவு செய்வதற்காக மக்களால் காவற்துறை நிலையத்துக்கு சமுகமளிக்க முடியாத நிலை இருப்பதாகவும் காவற்துறையினர் தெரிவித்தனர்.

அவர்கள் தொடர்பில் பயங்கரவாத தடை சட்டம் மற்றும் பணச்சலவை தடுப்பு சட்டம் என்பவற்றின் கீழ் விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் காவற்துறையினர் தெரிவித்தனர்.

இந்நிலையில் குறித்த வழக்கு விசாரணையை ஜுன் மாதம் 3ஆம் திகதி வரை ஒத்திவைத்த நீதிமன்றம், அன்றையதினம் இந்த விசாரணையின் முன்னேற்ற அறிக்கையை முன்வைக்குமாறும் காவற்துறைக்கு உத்தரவிட்டது.