துறைமுக நகர சட்டமூலம் தொடர்பிலான விவாதம் இன்று நாடாளுமன்றில்!
கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பிலான விவாதம் இன்று (19) நாடாளுமன்றில் ஆரம்பமாகவுள்ளது.
இரண்டு நாட்கள் இடம்பெறவுள்ள இந்த விவாதத்தின் பின்னர், நாளை பிற்பகல் 4 மணிக்கு குறித்த சட்டமூலம் தொடர்பான வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளது.
கொழும்பு துறைமுகநகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பில், கலந்துரையாடுவதற்கான விசேட அமைச்சரவை கூட்டம் ஒன்று நேற்று இடம்பெற்றது.
உயர்நீதிமன்றம் விதந்துரைத்த திருத்தங்களுக்கு அமைய, அவசியமான திருத்தங்களை சட்டமூலத்தில் உள்ளீர்ப்பதற்கு இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் 8ஆம் திகதி குறித்த சட்டமூலம் நாடாளுமன்றில் சமர்பிக்கப்பட்டது. சட்டமூலத்தின் சில சரத்துக்கள் அரசியலமைப்பிற்கு முரணானது என உத்தரவிடுமாறு கோரி உயர்நீதிமன்றில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்கள் மீதான பரிசீலனை, பிரதமநீதியரசர் தலைமையிலான ஐவரடங்கிய நீதியரசர்கள் ஆயம் முன்னிலையில், கடந்த மாதம் 19 ஆம் திகதி ஆரம்பமாகி, 23ஆம் திகதி நிறைவடைந்தது.
இந்தநிலையில், உயர்நீதிமன்றின் வியாக்கியானம் சபாநாயகருக்கு அனுப்பப்பட்டிருந்த நிலையில், அதனை அவர் நேற்று சபையில் அறிவித்தார்.
துறைமுகநகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தின் சில சரத்துக்கள் இலங்கையின் அரசியலமைப்புக்கு முரணாக இருப்பதால் குறிப்பிட்ட சரத்துக்களை நிறைவேற்றுவதற்கு சர்வசன வாக்கெடுப்பும், விசேட பெரும்பான்மையும் அவசியம் என்றும் உயர்நீதிமன்றம் தமது வியாக்கியானத்தில் குறிப்பிட்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.
எவ்வாறாயினும் குறிப்பிட்ட சரத்துக்களை திருத்துவதற்கு அரசாங்கம் தற்போது இணங்கியுள்ளதால் அதனை சாதாரண பெரும்பான்மையுடன் நிறைவேற்ற முடியும் என வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தன தெரிவித்தார்.
இதன்படி இன்று ஆரம்பமாகின்ற நாடாளுமன்ற விவாதத்தின் போது, அரசாங்கம் குறித்த சட்டமூலத்திற்கான திருத்தங்களையும் முன்வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.