தோட்ட தொழிற்சாலைகளை கொவிட் சிகிச்சை நிலையங்களாக மாற்ற நடவடிக்கை - ஜீவன் தொண்டமான்

தோட்ட தொழிற்சாலைகளை கொவிட் சிகிச்சை நிலையங்களாக மாற்ற நடவடிக்கை - ஜீவன் தொண்டமான்

பெருந்தோட்டப் பகுதிகளில் மூடப்பட்டுள்ள தோட்ட தொழிற்சாலைகளை கொவிட் சிகிச்சை நிலையங்களாக மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

தற்போது மலையகமெங்கும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. இதனால் நாளுக்கு நாள் தொற்றாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றது. எனவே கொரோனா தொற்றை கட்டுப்படுத்த நாம் அனைவரும் சுகாதார வழி முறைகளை உரியவாறு கடைப்பிடிக்க வேண்டும்.

தேயிலை தோட்டங்களில் உற்பத்தியை அதிகரித்தால் மாத்திரமே சம்பள உயர்வை வழங்க முடியும். அதற்காக இரண்டு கைகளை மாத்திரம் கொண்டுள்ள தொழிலாளி ஒருவருக்கு முடியுமான அளவே பறிக்க முடியும்.

30 ஆம் திகதி மேலதிக கொழுந்து பறித்தல் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும் என நம்புகின்றேன்.

கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட தொழிலாளி ஒருவர் பணிக்கு செல்ல முடியாது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கான நிவாரணம் வழங்கும் முறை தொடர்பில் கவனம் செலுத்த வேண்டியுள்ளது.

மாகாண சபை தேர்தல் தொடர்பில் அடுத்த மாதமளவில் ஏற்கனவே உள்ள தேர்தல் முறைமைக்கு அமைய ஒரு அறிக்கையை தயார் செய்து சமர்பிக்க எதிர்பார்க்கின்றோம்.

இந்த வருட முடிவுக்குள் அந்த அறிக்கையை சமர்பிக்கவுள்ளோம். அடுத்தது கொரோனாவால் பாதிக்கப்படட மக்களுக்கு நிவாரணம் வழங்கப்படுகின்றது. தேசிய வேலை திட்டத்திற்கு அமைய செயற்பட்டு வருகின்றோம் என்றார்.