மாரவிலயில் 8 வைத்தியர்களுக்கு கொரோனா
மாரவில ஆதார வைத்தியசாலையில் 8 வைத்தியர்களுக்கு கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதுவரை அந்த வைத்தியசாலையில் 31 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் தினுஷா பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
தற்போது அந்த வைத்தியசாலையின் 4 வாட்டுகள் மூடப்பட்டுள்ளதாகவும் விரைவில் அவற்றை திறக்க எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
அவசர சிகிச்சை பிரிவுகள் இரண்டும், தீவிர சிகிச்சை பிரிவு மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு சிகிச்சையளிக்கும் இரண்டு வாட்டுகளும் மூடப்பட்டுள்ளன.
அந்த வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் கடமையாற்றிய தாதியர்கள் இருவருக்கு தொற்று ஏற்பட்டதாக கடந்த வாரம் உறுதிப்படுத்தப்பட்டது.
இதனை அடுத்து மேற்கொள்ளப்பட்ட பிசீஆர் பரிசோதனைக்கு அமைய நேற்று 5 வைத்தியர்கள் உட்பட 20 பேருக்கு தொற்று உறுதியானது.
எனினும் நேற்று மாலை வேளையில் அந்த எண்ணிக்கை 29 அதிகரித்தது.
இன்று காலையாகும் போது அந்த வைத்தியசாலையில் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 31 ஆக உயர்வடைந்துள்ளது.
இவ்வாறு தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டவர்களில் 8 வைத்தியர்களும் அடங்குகின்றனர்.
இதனால் அந்த வைத்தியசாலைக்கு அழைத்துவரப்படும் நோயாளர்கள் சிலாபம் பொது வைத்தியசாலைக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஹட்டன் பிரதான தபால் நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் கூறினார்.
குறித்த தபாலகத்தில் பணி புரிந்த 2 ஊழியர்களுக்கு கொவிட் தொற்று ஏற்பட்டதையடுத்து இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அந்த 2 ஊழியர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கும் கொவிட் தொற்று உறுதியானதை தொடர்ந்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஹட்டன் - டிக்கோயா நகர சபையின் பொது சுகாதார அதிகாரி ராமய்யா பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ள 17 ஹட்டன் தபால் ஊழியர்களை ரெபிட் என்டிஜன் பரிசோதனைக்கு உட்படுத்தவுள்ளதாகவும் அவர் கூறினார்.
இதனால் இன்றைய தினம் வழங்கப்பட இருந்த முதியோர் கொடுப்பனவை வழங்காமல் இருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளளது.