போதியளவு பொதுப்போக்குவரத்து இன்மையினால் பயணிகள் பெரும் அசௌகரியம்!
பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள போதிலும் உரிய வகையில் போதுமானளவு பேருந்துகள் மற்றும் தொடருந்துகள் என்பன சேவையில் ஈடுபடவில்லை என தொழில் நடவடிக்கைகளுக்காக சென்றவர்கள் குற்றஞ்சாட்டினர்.
இன்று முற்பகல் 53 தொடருந்துகளை சேவையில் ஈடுபடுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்ட போதிலும், 10 தொடருந்துகளே சேவையில் ஈடுபடுத்தப்பட்டன.
தொடருந்து பிரதி பொது முகாமையாளர் காமினி செனவிரத்ன இதனை தெரிவித்துள்ளார்.
கண்டி, மஹவ, ரம்புக்கனை, சிலாபம் மற்றும் பெலியத்த பகுதிகளிலிருந்து கொழும்புக்கு 5 தொடருந்துகள் சேவையில் ஈடுபடுத்தபடவிருந்த நிலையில், அவை இரத்து செய்யப்பட்டதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.
தொடருந்து சேவையாளர்கள் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு முயற்சித்தமையினால் இந்த நிலை ஏற்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும், குறித்த 5 தொடருந்துகளில் மஹவ பகுதி தவிர்ந்த, ஏனைய இடங்களிலிருந்து தொடருந்து சேவை இடம்பெற்றதாக தொடருந்து பிரதி பொது முகாமையாளர் காமினி செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
இதேநேரம், பயணிகளுக்காக மேலதிக பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்ட போதிலும் போதுமான பேருந்து சேவைகள் இடம்பெறவில்லை என பயணிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.