திருகோணமலை மாவட்டத்தில் மேலும் 5 கொரோனா மரணங்கள் பதிவு!
இன்று முற்பகல் 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில், திருகோணமலை மாவட்டத்தில் ஐந்து பேர் கொவிட்-19 தொற்றினால் உயிரிழந்ததாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஏ.ஆர்.எம். தௌபீக் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், நோய் அறிகுறிகள் காணப்படுகின்றபோதிலும், பொதுமக்கள் வைத்தியசாலைகளுக்கு சென்று தங்களை பரிசோதனைக்கு உட்படுத்த தயங்குவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே குறித்து காலப்பகுதியில் 55 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியானதாக திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை தெரிவித்துள்ளது.
திருகோணமலை மாவட்டத்தில், இந்த மாதத்தின் இதுவரையான காலப்பகுதியில், 709 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தில் மேலும் மூன்று கொவிட்-19 மரணங்கள் பதிவானதாக மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாகலிங்கம் மயூரன் குறிப்பிட்டார்.
அத்துடன் அங்கு மேலும் 25 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியானதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.