முடக்கநிலையின் போது ஸ்பெயின் மக்கள் அரசாங்க உதவிகளை பெற தவித்தனர்: பிலிப் அல்ஸ்சான்

முடக்கநிலையின் போது ஸ்பெயின் மக்கள் அரசாங்க உதவிகளை பெற தவித்தனர்: பிலிப் அல்ஸ்சான்

கொவிட்-19 முடக்கநிலை காலங்களில் லட்சக்கணக்கான ஸ்பெயின் மக்கள், அரசாங்க உதவிகளைப் பெற முடியாமல் தவித்ததாக ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் நிபுணர் பிலிப் அல்ஸ்சான் தெரிவித்துள்ளார்.

இது மக்கள் மீதான பாதுகாப்பில் ஸ்பெயின் நிர்வாக அமைப்பில் உள்ள குறைபாடுகளைக் எடுத்துக் காட்டுவதாக அமைந்துள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார்.

ஸ்பெயினில் ஏறக்குறைய 47 மில்லியன் மக்கள், கடந்த மார்ச் 14ஆம் திகதி முதல் உலகின் மிகக் கடுமையான வைரஸ் கட்டுப்பாட்டுக்கு கீழ் வாழ்ந்து வந்தனர். தற்போது அங்கு கொரோனா வைரஸ் தொற்று குறைந்துவரும் நிலையில், கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர்.

எனினும், ஐரோப்பாவில் மிக மோசமான கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பாதிப்பை எதிர்கொண்ட ஸ்பெயினில், இரண்டாவது அலை நோய்த்தொற்றுகளைத் தடுப்பதற்காக, சமூக விலகள் விதிகள் மற்றும் முகக்கவசம் அணிவது தொடர்ந்து பின்பற்றப்பட்டு வருகின்றது.

ஸ்பெயினின் பொருளாதாரம் அதன் பெரும்பாலான ஐரோப்பிய அண்டை நாடுகளை விட சுருங்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்பெயினின் மத்திய வங்கி இந்த ஆண்டு 15 சதவீதம் அளவுக்கு மோசமான பொருளாதார சுருக்கத்தை கணித்துள்ளது.

ஸ்பெயினில், கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 298,869ஆக உள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 28,388ஆக உள்ளது.