வரக்காபொல – ருவன்வெல்ல பிரதேசங்களில் மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் இருவர் பலி! (படங்கள்)

வரக்காபொல – ருவன்வெல்ல பிரதேசங்களில் மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் இருவர் பலி! (படங்கள்)

வரக்காபொல, கஸ்னாவ பிரதேசத்தில் இரு வீடுகளின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்ததுடன், மற்றொருவர் காயமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர் 55 வயதான ஆண் ஒருவரென தெரிவிக்கப்பட்டுள்ளது. கஸ்வான பிரதேசத்தில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற இந்த விபத்தில் சிக்கியிருந்த இருவர் இராணுவத்தினரால் மீட்கப்பட்டனர்.

எனினும், அவர்களில் ஒருவர் மீட்கப்படும் வேளையிலேயே உயிரிழந்துள்ளார்.

இதன்போது, மீட்கப்பட்ட மற்றைய நபரான பெண் (உயிரிழந்த நபரின் தாய்), வரக்காபொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும், உயிரிழந்த நபரின் உடல் வரக்காபொல வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

வரக்காபொல



மேலும், அவிசாவளை, ருவன்வெல்ல பிரதேசத்தில் மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

ருவன்வெல்ல



இதேவேளை, உடுகம, அளுத்வத்த பிரதேசத்தில் கிங் கங்கையின்  கிளையாற்றின் மேலாக அமைந்துள்ள பாலமொன்றில் பயணித்துக் கொண்டிருந்தபோது, ஆற்றுவெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு 25 வயதான நபரொவருவர் காணாமல்போயுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அந்நபரை தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுவருவதாக காவல்துறையினர் மேலும் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, சீரற்ற காலநிலை காரணமாக ருவன்வெல்ல பிரதேசத்தில் வெள்ளத்தில் சிக்கியிருந்த 4 குடும்பங்களைச் சேர்ந்த 14 பேர் இராணுவத்தினரால் மீட்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் குழந்தையொன்றும் அடங்குவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

நேற்று நள்ளிரவு முன்னெடுக்கப்பட்ட இந்த மீட்பு நடவடிக்கை சுமார் 2 மணித்தியாலங்களாக நீடித்திருந்தது.


ருவன்வெல்லவில் மீட்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டபோது....