நாளை மறுநாள் நோன்பு பெருநாள்
புனித ஷவ்வால் மாதத்துக்கான தலைப்பிறை தென்படாத காரணத்தினால் நாளை மறுதினம் 14ஆம் திகதி புனித நோன்பு பெருநாளை கொண்டாடுவதற்கு கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இன்று கூடிய பிறைகுழு ஏகமனதாக தீர்மானித்தது.
ஹிஜ்ரி 1442 புனித ஷவ்வால் மாதத்திற்கான தலைப்பிறை பார்க்கும் மாநாடு இன்று கொழும்பு பெரிய பள்ளிவாசல் மாநாட்டு மண்டபத்தில் கொழும்பு பெரிய பள்ளிவாசலின் பிறைகுழுத் தலைவர் கலீபதுல் குலபா மௌலவி அப்துல் ஹமீத் பஹ்ஜி தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது நாட்டின் எந்த பாகத்திலும் ஷவ்வால் மாத்திற்கான தலைப்பிறை தென்படாத காரணத்தினால் புனித ரமழானை நாளை வியாழக்கிழமை 30ஆக பூர்த்தி செய்து புனித நோன்புப் பெருநாளை நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை 14ஆம் திகதி கொண்டாடுவதற்கு தீர்மானிக்கப்பட்டது.
இந்த மாநாட்டில் பிறைகுழு உறுப்பினர்கள், அகில இலங்கை ஜமிய்யதுல் உலமா சபையின் அங்கத்தவர்கள், கொழும்பு பெரிய பள்ளிவாசலின் நம்பிக்கையாளர்கள், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள அதிகாரிகள், வளிமண்டலவியல் திணைக்கள அதிகாரிகள், சகல பள்ளிவாசல்கள், தரீக்காக்கள், ஷாவியாக்களின் பிரதிநிதிகள், மேமன் சங்க உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.