கொழும்பு நட்சத்திர விடுதிகளுக்கு விற்கப்பட்ட போலி உயர்தர மதுபானங்கள்! (படங்கள்)

கொழும்பு நட்சத்திர விடுதிகளுக்கு விற்கப்பட்ட போலி உயர்தர மதுபானங்கள்! (படங்கள்)

அம்பலாந்தோட்டை, மயுரபுர பகுதியில் உலகில் மிக விலை உயர்ந்த மதுபானங்களை ஒத்ததாக, இலங்கையில் உற்பத்திசெய்யப்பட்ட ஒருதொகை போலி மதுபானங்களுடன் சந்தேக நபரொருவர் அம்பலாந்தோட்டை காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இதன்போது அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கமைய, இவர் உள்நாட்டு மதுபானங்களை கொள்வனவு செய்து, இரசாயனங்களைக் கொண்டு அதன் நிறம் மற்றும் சுவையை மாற்றி விலையுயர்ந்த மதுபானங்களைப் போன்று இந்த உற்பத்திகளை மேற்கொண்டுவந்துள்ளார் எனத் தெரியவந்துள்ளது.

இவ்வாறு போலியாக உற்பத்தி செய்யப்பட்ட மதுபானத்தை விலையுயர்ந்த விஸ்கி, ப்ரேண்டி ஆகியவற்றின் வர்த்தகநாமத்தைக் கொண்ட சுற்றுத்தாளுடன் கூடிய போத்தல்களில் அடைத்து, கொழும்புக்கு விநியோகித்துள்ளதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

அதற்கமைய, காவல்துறையினர் முன்னெடுத்த சுற்றிவளைப்பில் போலி மதுபான உற்பத்திக்கு பயன்படுத்தப்பட்ட பல்வேறு இரசாயனங்கள் மற்றும் உபகரணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

சுற்றிவளைப்புக்கு முன்னதாகவே இச்சந்தேகநபர் போலி உயர்தர மதுபானங்களை கொழும்புக்கு அனுப்பிவைத்துள்ளார் என தமக்கு தகவல் கிடைத்துள்ளதாகவும், இதுதொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும், அம்பலாந்தோட்டை காவல்நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

இங்கு உற்பத்தி செய்யப்பட்ட மதுபானங்கள், கொழும்பிலுள்ள பிரபல நட்சத்திர ஹோட்டல்களுக்கு 5,000 மற்றும் 6,000 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக அம்பலாந்தோட்டை காவல்நிலைய பொறுப்பதிகாரி, காவல்துறை பரிசோதகர் ஜகத் விஜேரத்ன மேலும் தெரிவித்தார்.