ரிஷாட்டின் கைது தொடர்பில் வெளியான தகவல்

ரிஷாட்டின் கைது தொடர்பில் வெளியான தகவல்

ஜனநாயக விரோதமான முறையிலேயே ரிஷாட் பதியூதீன் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக அவரது சட்டத்தரணி ருஸ்டி ஹபிப் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், ஆதாரமற்ற வகையில் ரிஷாட் பதியூதீன் கைதுசெய்யப்பட்டமை மூலம் சர்வதேச அளவில் அபகீர்த்தி ஏற்படும் என எச்சரித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

இலங்கையைத் தாண்டி சர்வதேச மட்டத்தில் கண்காணிக்கப்பட்டு வரும் இந்த வேளையில் சட்டவிரோதமாகவும் மனித உரிமையை பாரிய அளவில் மீறப்பட்ட வகையிலும் ரிசாட் பதியுதீனின் கைது இடம்பெற்றுள்ளது.

இது முற்றுமுழுதாக அரசியல் சார்ந்த கைது. இதன் மூலம் இலங்கைக்கு சர்வதேச மட்டத்தில் அபகீர்த்தி ஏற்படவுள்ளது. இதற்கு நாம் முகம் கொடுக்க வேண்டிவரும். இது ஜனநாயகம் மற்றும் மனித உரிமை மீறல் தொடர்பான பிரச்சனை. ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையில் எங்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

ரிசாட் பதியுதீனின் கைது தொடர்பில் எந்தவொரு நீதிமன்றத்திற்கும் அறிக்கை சமர்ப்பிக்கப்படவில்லை. இதேவேளை குற்றச்சாட்டுத் தொடர்பான தொழிநுட்ப மற்றும் விஞ்ஞானபூர்வமான ஆதரங்களை நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்க வேண்டும்.

அவ்வாறு அல்லாது வெறுமனே அவரை தடுத்து வைத்திருப்பதானது மனித உரிமை மீறலாகும் என்றார்.