போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட இளைஞர் உள்ளிட்ட மூவர் கைது

போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட இளைஞர் உள்ளிட்ட மூவர் கைது

நோர்வூட் காவல்துறை பிரிவுக்குட்பட்ட நோர்வூட் நகரில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட இளைஞர் உள்ளிட்ட மூன்று பேரை காவல்துறையினர் இன்றைய தினம் கைது செய்தனர்.

நீண்ட காலமாக நோர்வூட் நகரப்பகுதியில் போதைப்பொருள் வியாபாரம் மிகவும் சூட்சுமமான முறையில் இடம்பெற்று வருவதாக நோர்வூட் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து காவல்துறையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போது  150 கிராம் கேரள கஞ்சா, ஐஸ் போதைப்பொருள் உள்ளடங்கிய 10 சிறிய பக்கட்டுகள், ஹெரோயின் ஒரு கிராம், 14 லைட்டர்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலும் 12 ஆயிரம் ரூபா பணம், இரண்டு கைத்தொலைபேசிகள், போதைப் பொருள் பாவிப்பதற்காக பயன்படுத்தும் உபகரணங்கள், போதைப்பொருளை பொதி செய்வதற்கு பயன்படுத்தும் பொலிதீன்கள் என்பனவும் இதன்போது மீட்கப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட போதைப்பொருள் வியாபாரியான குறித்த இளைஞர் நோர்வூட் பகுதியை சேர்ந்தவர் என்றும் இவர் கொழும்பிலிருந்து போதைப்பொருட்களை கொண்டுவந்து இங்குள்ள இளைஞர்களுக்கு விற்பனை செய்து வந்துள்ளதாகவும் காவல்துறையினரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நோர்வூட் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.