தௌபீக் எம்.பிக்கு இம்ரான் மஹ்ரூப் காரசாரமான பதில்

தௌபீக் எம்.பிக்கு இம்ரான் மஹ்ரூப் காரசாரமான பதில்

இருபதுக்கு வாக்களித்த தௌபீக் எம்.பியின் கேள்விகளுக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் காரசாரமான பதில் வழங்கியுள்ளதுடன், தொலைக்காட்சி விவாதத்துக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.

இருபதாம் திருத்தச் சட்ட மூலத்துக்கு ஆதரவாக வாக்களித்து அண்மையில் பிரதமரின் இப்தாரில் பங்குகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ் தௌபீக், ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரானிடம் தனது முகநூலில் சில கேள்விகளை கேட்டிருந்தார்.

தற்போது அந்தக் கேள்விகளுக்கு காரசாரமாக பதில் அளித்துள்ள இம்ரான் மஹ்ரூப் நாடாளுமன்ற உறுப்பினர் தௌபீக்கை நேரடியாக தொலைக்காட்சி விவாதம் ஒன்றுக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரிவித்துள்ள அவர், 20 ஆம் திருத்த சட்டத்துக்கு வாக்களித்தபின் நாடாளுமன்றத்திலோ ஊடகத்திலோ வாயை திறக்காத நீங்கள் 7 மாதங்களின் பின் என்னிடம் கேள்வி கேட்க உங்கள் வாயை திறந்திருப்பது எனக்கு சந்தோசமே.

இந்தப் பிரச்சினைகளுக்கு 2000 ஆம் ஆண்டு முதல் சுமார் 15 வருட ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் பிரதி அமைச்சராக இருக்கும் ஒருவர் 2015 இலிருந்து 4 1/2 வருடங்கள் அரச பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த என்னிடம் பதிலை எதிர்பார்ப்பது உங்கள் அரசியல் ஆளுமையை சிறப்பாக எடுத்துக்காட்டுகிறது.

இருந்தும் எனக்கு வாக்களித்த மக்களுக்காக என்னால் இந்த கேள்விகளுக்கு பதில் கூற முடியும் என தெரிவித்துள்ளார்.