கைப்பேசி திருட்டில் ஈடுபட்ட அறுவர் கைது! (காணொளி)
பிரபல சர்வதேச பொதி சேவை நிறுவனம் ஒன்றினூடாக இலங்கைக்கு அனுப்படும் விலையுர்ந்த ஆப்பிள் கையடக்க தொலைபேசிகளை நீண்டகாலமாக திருடி விற்பனை செய்து வந்த ஆறு பேரை நீர்கொழும்பு காவல்துறை குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.
குறித்த பொதி சேவை நிறுவனத்தின் 3 கண்காணிப்பாளர்களும், 3 பணியாளர்களுமே நேற்றைய தினம் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதன்போது மினுவாங்கொடை, கண்டி மற்றும் திவுலபிட்டிய ஆகிய பிரதேசங்களில் விற்பனை செய்யப்பட்டிருந்த 25 லட்சம் ரூபாய் பெறுமதியான 16 ஆப்பிள் கையடக்க தொலைபேசிகளையும் காவல்துறையினர் கையகப்படுத்தியுள்ளனர்.
மினுவாங்கொடை, ஜா-எல, கொட்டாவை மற்றும் மட்டக்குளி ஆகிய பகுதியை சேர்ந்த குறித்த சந்தேகநபர்கள் நேற்றைய தினம் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.