கொரோனா தொற்று காரணமாக ஊட்டச்சத்து குறைபாட்டினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை உயர்வடையக்கூடும்!
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஊட்டச்சத்து குறைபாட்டினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரிக்கக் கூடும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
கொவிட் தொற்று பரவலுக்கு முன்னர் உலக சனத்தொகையில் நூற்றுக்கு 8.9 சதவீதமானோர், அதாவது சுமார் 690 மில்லியன் பேரளவில் ஊட்டச்சத்து குறைபாட்டினால் பாதிக்கப்பட்டனர்.
இந்த எண்ணிக்கையானது, மேலும் 83 முதல் 132 மில்லியன் வரையில் அதிகரிக்கக்கூடும் என உணவு மற்றும் விவசாய அமைப்பின் முதற்கட்ட மதிப்பீட்டில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
2019 உலக உணவு பாதுகாப்பு குறியீட்டின்படி, 113 நாடுகளில் இலங்கை 66 ஆவது இடத்தில் பதிவாகியது.
குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாடானது, இலங்கையில் நீண்ட காலமாக இருக்கும் பிரச்சினையாகும் என இலங்கை மத்திய வங்கியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொற்று நோய் பரவல் காலத்தில் உணவு உற்பத்திகளை தொடர்ச்சியாக முன்னெடுத்தல் மற்றும் விநியோகத்திற்காக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட போதும், சர்வதேச மற்றும் உள்நாட்டில் நடைமுறையான பொருளாதார மற்றும் சமூக செயற்பாடுகளை வரையறைக்கு உட்படுத்தியமை, நடமாட்டக் கட்டுப்பாட்டுகளை விதித்தமை என்பன உணவு பாதுகாப்பை பாதித்துள்ளன.
இதேநேரம், வைரஸ் பரவலுடன், உணவுக்கான கேள்வியில், நோய் பரவும் முறைகள் குறித்த பொதுமக்களின் அணுகுமுறைகளின் விளைவாக, முக்கியமான புரத உணவுகளான இறைச்சி மற்றும் மீன்களுக்கான தேவை கடந்த ஆண்டு வீழ்ச்சி அடைந்திருந்ததாக இலங்கை மத்திய வங்கியின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தொற்று பரவலுக்கு மத்தியில் உணவு பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக இலங்கை அரசாங்கம் கொள்கை ரீதியான பல தீர்மானங்களை மேற்கொண்டிருந்தது.
இது, உணவுத் தேவையை ஓரளவு நிறைவு செய்வதற்கு வாய்ப்பாக அமைந்ததென மத்திய வங்கியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறிருப்பினும், பிரதான உணவுப் பொருட்கள் சிலவற்றில், இலங்கை தொடர்ந்தும் ஏற்றுமதியை சார்ந்து இருப்பதனால், நாட்டின் உணவுப் பாதுகாப்புக்கு ஆபத்தை தவிர்ப்பதற்காக, பிராந்திய ரீதியாகவும், நாட்டுக்குள்ளும் உணவு வர்த்தகத்திற்கு வசதிகளை ஏற்படுத்துவது முக்கியமானது என்றும் மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.
உலகளாவிய தொற்றுப் பரவல் காரணமாக உணவு தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என எதிர்வு கூறல்கள் வெளியிடப்படுகின்ற சந்தர்ப்பத்தில், காட்டு யானைகள், குரங்குகள், மயில்கள் மற்றும் காட்டுப் பன்றிகள் போன்ற விலங்குகளின் காரணமாக நாட்டில் பயிர்களுக்கு குறிப்பிடத்தக்களவு சேதங்கள் ஏற்படுகின்றன.
இதனூடாக உள்நாட்டு உணவு பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுவதாக இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது