அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் பறந்த சுற்றுநிருபம்
சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்ட சுகாதார வழிகாட்டியின் பிரகாரம் செயற்படாதவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பில் நாடளாவிய ரீதியில் உள்ள பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் மற்றும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களுக்கும்,சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் தலைமையகத்தால் இந்த சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
பொது போக்குவரத்து சேவைகள் மற்றும் வாடகை வாகனங்களில் பயணிகளை அழைத்து செல்வது தொடர்பில், மே மாதம் முதலாம் திகதி சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகத்தினால் வழிகாட்டி அறிவித்தல் வெளியிடப்பட்டிருந்தது.
பேருந்துகளின் ஆசன எண்ணிக்கைக்கு ஏற்ற வகையிலேயே பயணிகள் அழைத்து செல்லப்பட வேண்டும். முச்சக்கரவண்டி மற்றும் கார்களில் சாரதி தவிர்ந்த மேலும் இருவர் மாத்திரமே பயணிக்க முடியும் என கொவிட் தடுப்பு தொடர்பான புதிய சுகாதார வழிகாட்டியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விதிமுறைகளை மீறி செயற்படும் சாரதிகள், நடத்துநர்கள் மற்றும் வாகனங்களின் உரிமையாளர்கள் ஆகியோருக்கு எதிராக தனிமைப்படுத்தல் சட்டத்தின் பிரகாரம் நடவடிக்கை எடுக்குமாறு, குறித்த சுற்று நிருபத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.