வாக்களித்து கோட்டாபய அரசாங்கத்திற்கு மக்கள் அதிகாரத்தை வழங்கியது இத்தகைய மனித அழிவை சந்திப்பதற்கு அல்ல!
மக்களின் ஜனநாயகத்தை நாடாளுமன்றத்தில் வெளிப்படுத்துவதற்கு எதிர்க்கட்சியினருக்கு சந்தர்ப்பம் வழங்கப்படுவதில்லை எனவும் அரசாங்கத்திற்கு ஏற்ற வகையிலேயே நாடாளுமன்ற நிகழ்ச்சி நிரல் தயாரிக்கப்படுகின்றது எனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சி அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவிலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அங்கு தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
நாங்கள் மிகவும் கவலையடைகின்றோம். நாட்டிலுள்ள அப்பாவி மக்கள் இந்த அரசாங்கத்தில் நம்பிக்கை வைத்து அதிகாரத்திற்கு கொண்டுவந்தார்கள். கோட்டாபய ராஜபக்ஷவை ஜனாதிபதியாக்கியது இத்தகைய மனித அழிவை சந்திப்பதற்கு அல்ல. இவ்வாறு நாடும் அழிவை சந்திப்பதற்கு அல்ல, நாட்டின் பொருளாதாரத்தையும் நாடாளுமன்ற சம்பிரதாயங்களை அழிப்பதற்கு அல்ல.
இன்று நாடாளுமன்றத்தினுள் மக்களின் பிரதிநிதித்துவ ஜனநாயக பண்புகளை நடைமுறைப்படுத்துவதற்கு இடமளிப்பதில்லை. நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியினால் எந்த ஒரு தீர்மானத்தினையும் எடுக்க முடிவதில்லை. எல்லா வகையான தீர்மானங்களையும் அரசாங்கமே எடுத்துவிடுகின்றது. அரசாங்கத்திற்கு ஏற்ற வகையில் தான் நாடாளுமன்ற நிகழ்ச்சி நிரல் தயாரிக்கப்படுகின்றது.
நாடாளுமன்றத்தின் நடவடிக்கை தொடர்பான புரிந்துணர்வினை அறியாதவர் போல் சபாநாயகர் இன்று காணப்படுகின்றார். கடந்த காலத்தில் சபாநாயகர் செயற்பட்ட விதத்தினை அவதானித்தவர் என்ற வகையிலும் கூட நாடாளுமன்ற நடவடிக்கையினை முன்னெடுக்கத் தவறிவிடுகின்றார். இதேவேளை சபாநாயகரின் பொறுப்பினை தினேஸ் குணவர்த்தன மற்றும் ஜோன்சன் பெர்ணாண்டோ ஆகியோர் பிரயோகிக்க ஏன் சபாநாயகர் அனுமதிக்கின்றார் என்று தெரியவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.