மக்களின் ஜனநாயக உரிமையை மீறாதீர் -ஐக்கிய தேசிய கட்சிக்கு சென்ற காட்டமான கடிதம்
தேசிய பட்டியலில் உள்ள வெற்றிடத்தை உடனடியாக நிரப்ப பொருத்தமான நபரை நியமிக்க வேண்டும் என்றும் மக்களின் ஜனநாயக உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்து சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம்( கபே) ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளருக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளது.
தேசிய பட்டியலில் எவரையும் நியமிக்காததன் மூலம் ஐக்கிய தேசிய கட்சி மக்களின் ஜனநாயக உரிமைகளை மீறியுள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
உள் கட்சி நெருக்கடிகளால் கட்சி மக்களின் ஜனநாயக உரிமைகளை குறைமதிப்பிற்கு உட்படுத்துவதாக அமைப்பின் நிர்வாக இயக்குனர் அகமது மனஸ் தெரிவித்தார்.
"பொதுத் தேர்தல் நடைபெற்று ஏழு மாதங்கள் கடந்த நிலையிலும் , ஐக்கிய தேசிய கட்சி சார்பில் தேசிய பட்டியலில் எந்தவொரு பிரதிநிதியும் பரிந்துரைக்கப்படவில்லை என்பது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. இந்த நிலைமை பிரதிநிதித்துவ ஜனநாயகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தேசிய பட்டியலில் உள்ள வெற்றிடத்தை நிரப்பவும், மக்களின் ஜனநாயக உரிமைகளை மதிக்கவும் , பொருத்தமான உறுப்பினரை உடனடியாக நியமிக்க வேண்டும் ”என்று நாங்கள் கேட்டுக் கொள்கின்றோம்.
பொதுத் தேர்தல் நடைபெற்று ஏழு மாதங்கள் கடந்தும் தேசிய பட்டியலுக்கு நாடாளுமன்ற உறுப்பினரை பரிந்துரைக்கத் தவறியது ஐக்கிய தேசிய கட்சியின் அரசியல் அராஜகத்தை பிரதிபலிக்கிறது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
"இதுவரை தேசிய பட்டியல் வெற்றிடத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினரை நியமிக்காததற்கு முக்கிய காரணம் கட்சியின் உள் நெருக்கடிதான் என்பது தெளிவு, ஆனால் உங்களுக்கு வாக்களித்த வாக்காளர்கள் அந்த நெருக்கடிகளுக்கு பொறுப்பல்ல என்பது எங்கள் கருத்து. " என அவர் தெரிவித்துள்ளார்.
வெளியிடப்பட்ட ஐக்கிய தேசிய கட்சி பட்டியலின்படி, ஜோன் அமரதுங்காவின் பெயர் ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்டிருந்தாலும், நியமனம் இன்னும் செய்யப்படவில்லை, இந்த நிலைமை பிரதிநிதித்துவ ஜனநாயகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்று கபே தெரிவித்துள்ளது.
ஓகஸ்ட் 5, 2020 அன்று நடைபெற்ற பொதுத் தேர்தலில் 249,485 வாக்குகளைப் பெற்ற ஐக்கிய தேசியக் கட்சி, 2.15% வாக்குகளைப் பெற்று ஒரே ஒரு தேசிய பட்டியல் ஆசனத்தை மட்டுமே பெற முடிந்தது.
இதேவேளை, ஐக்கியதேசிய கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை இந்த பதவிக்கு பரிந்துரைப்பதாக கட்சி சமீபத்தில் அறிவித்த போதிலும், ரனில் விக்கிரமசிங்க இதுவரை அது தொடர்பில் பதிலளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.