கொண்டாட்டங்களை ஏற்பாடு செய்பவர்கள், ஆதரவளிப்பவர்கள் கைது செய்யப்படுவர்

கொண்டாட்டங்களை ஏற்பாடு செய்பவர்கள், ஆதரவளிப்பவர்கள் கைது செய்யப்படுவர்

மாநாடுகள், உட்புற அல்லது வெளிப்புற நிகழ்ச்சிகள், திருவிழாக்கள் மற்றும் கொண்டாட்டங்கள் போன்றவற்றில் ஈடுபடுகின்றவர்கள் மற்றும் அவர்களுக்கு ஆதரவு வழங்குபவர்களை கைது செய்து தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பதற்கான விசேட சுற்றுநிருபம் சகல காவல் நிலையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹன இதனைத் தெரிவித்தார்.

புதிய சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய இசை நிகழ்ச்சிகள், களியாட்ட கொண்டாட்டங்கள் மற்றும் கரையோர கொண்டாட்டங்கள் என்பவற்றிற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றவர்கள் மற்றும் அவற்றிற்கு ஆதரவு வழங்குபவர்களைக் கைது செய்வதற்கான சுற்றுநிருபம் காவல்துறை தலைமையகத்தினால் சகல காவல்நிலையங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் தகவல் அறிந்த உடன் புலனாய்வு பிரிவினரை ஈடுபடுத்தி விசேட சுற்றிவளைப்புகளை முன்னெடுக்குமாறு காவல் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் காவல்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நேற்று (04) பிற்பகல் 4 மணி முதல் இன்று (05) அதிகாலை வரையில் மேல் மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் களியாட்ட விடுதிகள், பந்தய நிலையங்கள் என்பவற்றில் சட்டவிரோதமாகவும் தனிமைப்படுத்தல் விதிகளை மீறியும் செயற்பட்ட 75 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.