நடுக்கடலில் உயிருக்கு போராடிய ஆறு இலங்கையர்கள்!
படகு கவிழ்ந்த நிலையில் இந்தியகடலில் சிக்கித்தவித்த இலங்கை மீனவர்கள் ஆறு பேரை இந்திய கடற்படையினர் இன்று பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.
இன்று, காலை 7:15 மணியளவில், சென்னையிலிருந்து கிழக்கே சுமார் 170 கடல் மைல் தொலைவில் ஆறு இலங்கை மீனவர்களுடன் கடலில் தத்தளித்த படகொன்றினை இந்திய கடலோர கடற்படையினர் மீட்டுள்ளனர்.
விசாகப்பட்டினம் நோக்கி பயணித்த ஆறுவர் கொண்ட படகு நடுகடலில் குடைசாய்ந்ததையடுத்து மீனவர்கள் உயிருக்கு போராடியுள்ளனர்.
சென்னையில் உள்ள இந்திய கடலோர காவல்படையின் (ஐ.சி.ஜி) கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையம் (எம்.ஆர்.சி.சி) மேற்கொண்ட நடவடிக்கையை அடுத்தே இவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு மீட்கப்பட்ட மீனவர்களை இலங்கை துணை உயர் ஸ்தானிகராலயத்துடன் இணைந்து அவர்களின் வீடுகளுக்குத் திருப்பி அனுப்பும் நடவடிக்கையை கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையம் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.