“அப்பா பாவம்” மேடைக்கு மேடை உயிர்பெறும் ஆறுமுகம் தொண்டமான் - ஆதங்கங்களை கொட்டித் தீர்த்த ஜீவன்!
மலையகத்தில் குறைகூறும் அரசியல் கலாசாரத்தை மாற்றியமைக்க வேண்டும் என இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
சாக்கடை அரசியலை சுத்தப்படுத்துவதற்காக இளைஞர்கள் களத்தில் இறங்கவேண்டும். அரசியலில் நடிப்பவர்களுடன் இணைந்து செயற்படமுடியாது. அடிமட்ட தொண்டர்களுக்காக காங்கிரஸின் கதவு திறந்தே உள்ளது. முதுகில் குத்திவிட்டு சென்றவர்களுக்கு இடமில்லை, நிச்சயம் மாற்றத்தை ஏற்படுத்துவோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
பூண்டுலோயா பேர்லேன்ட்ஸ் தோட்டத்தில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,
" ஆயிரம் ரூபா சம்பளத்தை வழங்குவதற்கு கம்பனிகள் இணக்கம் தெரிவித்துவிட்டன. ஆனால், நிபந்தனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. அந்த நிபந்தனைகளை எம்மால் ஏற்கமுடியாது. மூன்று மாதங்களுக்கு 100 ரூபா கொடுப்பனவை வழங்கினர். இதனால் நிலுவை சம்பளத்தை இழக்கவேண்டிய நிலை ஏற்பட்டது. எனவே, நாம் நிபந்தனையை ஏற்று கையொப்பமிட்டால் இவர்களுக்கும், எங்களுக்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடும்.
கடந்த நான்கு வருடங்களாக ஆயிரம் ரூபா பற்றி மட்டுமே கதைத்தார்கள். இவ்வாறு கதைத்து ஏனைய பிரச்சினைகளை மூடிமறைத்துவிட்டனர். ஆயிரம் ரூபாவைத்தவிர எமக்கு வேறு பிரச்சினைகள் இல்லையா? இளைஞர், யுவதிகளுக்கு வேலைவாய்ப்பு இருக்கின்றதா? இல்லை. கேட்டால் வீடு கட்டிக்கொடுத்தோம் என்கின்றனர். வேலையின்மை பிரச்சினைக்கும், வீட்டுப்பிரச்சினைக்கு இருக்கும் தொடர்புதான் என்ன?
நீ பெரியவனா, நான் பெரியவனா என்ற குறைகூறும் அரசியல் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதனை நாம் மாற்றியமைக்க வேண்டும்.
அப்பா உயிருடன் இருக்கும்போது அவரின் பெயரைப்பயன்படுத்தியே அரசியல் செய்தனர். அவர் பாவம். இரண்டு மாதங்களுக்கு முன்னர் இறந்துவிட்டார். ஆனால், இன்னும் அவரை வைத்து அரசியல் செய்ய பார்க்கின்றனர். அப்பாமீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் போலியானவை என்பது உறுதியாகிவிட்ட நிலையில், இப்போது என்னை விமர்சிக்க ஆரம்பித்துவிட்டனர்.
தேர்தல் காலத்தில் மட்டும் அல்ல அதற்கு முன்னரும் களத்துக்கு சென்று நான் மக்களுக்கு சேவை செய்துள்ளேன். மண்சரிவு இடம்பெறும்போது உடனே சென்றுள்ளேன். ஆனால், அதனையும் வாய்கூசாமல் விமர்சிக்கின்றனர். தீ விபத்து இடம்பெற்ற ஒரு பகுதிக்கு சென்றால், ஜீவன் தொண்டமான் தான் தீ வைத்துள்ளார் என கூறுமளவுக்கு கீழ்த்தரமாக அரசியல் நடத்துகின்றனர்.
இப்படியான கருத்துகளை பார்த்துவிட்டு வெளிமாவட்டங்களில் இருப்பவர்கள் சிரிக்கின்றனர். தற்போதுள்ளது அரசியல் சாக்கடையென விமர்சிக்கின்றனர். அதனை சுத்தப்பட்டுத்துவதற்கு இளைஞர்கள் முன்வரவேண்டும்.
மலையக அரசியல்வாதிகள் என்று ஒன்றிணைந்து செயற்படுகின்றார்களோ அன்றுதான் மலையகம் முன்னேறும். இதுதான் உண்மையான விடயம். இங்குள்ள பிரச்சினை தூங்குபவனை எழுப்பலாம், தூங்குபவன் போல் நடிப்பவனை எழுப்பமுடியாது என எனது தந்தை அடிக்கடிகூறுவார்.
ஆயிரம் ரூபா வழங்குவதாக ரணில் விக்கிரமசிங்க கூறவே இல்லை என்று முன்னாள் அமைச்சர் ஒருவர் தெரிவிக்கின்றார். அதேபோல் தொண்டமான் பெயர்பலகையை அகற்றவில்லை எனவும் குறிப்பிடுகின்றார். ஆனால் உண்மை என்னவென்பது மக்களுக்கு தெரியும். இப்படியானவர்களுடன் இணைந்து வேலைசெய்யமுடியுமா?
அப்பா இருக்கும்போது சந்திரசேகரனுடன் இணைந்து செயற்பட்டார். அப்பா, ஐயா, சந்திரசேகரன் ஆகிய மூவரும் ஒன்றாக இருக்கும்போதே தனிவீட்டுத்திட்டம் மலையகத்துக்கு வந்தது. ஆனால், நாங்கள்தான் தனி வீடுகட்டினோம் என்று பொய்யுரைக்கின்றனர்.
சுமார் 30 ஆயிரத்துக்கு மேல் வீடுகள் கட்டப்பட்டன. அந்த வீடுகளில் கூரைகள் எல்லாம் காற்றில் பறக்கவில்லை. தோட்டத்தில் வேலைசெய்தால் மட்டும் தான் வீடு என்பது அல்ல தோட்டத்தில் பிறந்திருந்தாலும் வீடு வழங்கப்படும் என்பதே எமது நோக்கம்.
ஏழு பேர்சஸ் என்பதற்குள் முடங்காமல் காணி உரிமையை பெற்றுக்கொடுக்க திட்டமிட்டிருந்தோம். கிராமமொன்றை உருவாக்கி பொருளாதாரத்தையும் பலப்படுத்துவதே எமது இலக்கு என அவர் மேலும் தெரிவித்தார்.