பலத்த பாதுகாப்புடன் மதுரங்குளியில் கோட்டாபய!

பலத்த பாதுகாப்புடன் மதுரங்குளியில் கோட்டாபய!

ஸ்ரீலங்கா ஜனாதிபதி இன்றைய தினம் புத்தளம் மதுரங்குளி பிரதேசத்திற்கு தேர்தல் பிரசாரத்திற்காகசென்றிருந்தார். இதன் காரணமாக அந்த பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அத்துடன் விஷேட அதிரடிப் படையினரும், பொலிஸாரும் இணைந்து பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் புத்தளம் மாவட்ட வேட்பாளர் ஏ.எச்.எம்.ரியாஸின் ஏற்பாட்டில் மதுரங்குளி வாராந்த சந்தைக் கட்டடத் தொகுதியில் இடம்பெற்ற நிகழ்வில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற வேட்பாளர்கள், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், பிரதேச, மாவட்ட அமைப்பாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது, மதுரங்குளி வாராந்த சந்தைக் கட்டடத்தில் ஒன்றுகூடியிருந்த மூவின மக்களையும், சமயத் தலைவர்களையும், வர்த்தகர்களையும் சந்தித்துக் கலந்துரையாடிய ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ, அந்த மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளையும் கேட்டறிந்து கொண்டார்.

ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடிய பொதுமக்களும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆதரவாளர்களும் மகஜர்களையும் ஜனாதிபதியிடம் கையளித்தனர்.