அரிசி தட்டுப்பாட்டை ஏற்படுத்த இடைத்தரகர்களுக்கு இடமளிக்க வேண்டாம்- ஜனாதிபதியிடம் கோரிக்கை
அரிசி தட்டுப்பாட்டை ஏற்படுத்த இடைத்தரகர்களுக்கு இடமளிக்க வேண்டாமென பொலன்னறுவை விவசாயிகள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுஜன பெரமுனவின் தேர்தல் பிரசாரத்திற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று பொலன்னறுவைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.
இங்கு இடம்பெற்ற பல்வேறு மக்கள் சந்திப்புகளிலும் ஜனாதிபதி கலந்து கொண்டதோடு, அங்கு வருகைத் தந்திருந்த மக்களுடனும் சுமூகமாக கலந்துரையாடினார்.
இதன்போது, அரிசி தட்டுப்பாட்டை ஏற்படுத்த இடைத்தரகர்களுக்கு இடமளிக்க வேண்டாமென பொலன்னறுவை விவசாயிகள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் விசேடமாக கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுதொடர்பாக கருத்துரைத்த ஜனாதிபதி, அழிவுக்குள்ளாகியிருந்த அரிசி களஞ்சியங்களை இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் புனர்நிர்மாணம் செய்வதற்கும் நெல்லை முறையாக கொள்வனவு செய்வதற்கும் முறைமை ஒன்றை தயாரித்ததாகவும் தெரிவித்தார்.
எதிர்வரும் காலங்களில் நெற்பயிர்ச் செய்கையில் ஈடுபடும் விவசாயிகளை பாதுகாத்து பிரச்சினைகள் ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
அதேநேரம், மத்திய வங்கி மோசடிக்கு பொறுப்புக் கூற வேண்டியவர்களை சட்டத்தின் முன் நிறுத்துமாறும் பொலன்னறுவை மக்கள் ஜனாதிபதியிடம் இதன்போது கோரிக்கை விடுத்தனர்.
தொழில் பிரச்சினை, காட்டு யானைகளின் அச்சுறுத்தல் என்பன பொலன்னறுவை மாவட்டத்தின் அதிக பிரதேசங்களில் காணப்படுவதாகவும் இவற்றுக்கு நிரந்தரத் தீர்வை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்குமாறும் அவர்கள் ஜனாதிபதியிடம் கேட்டுக்கொண்டனர்.
பொதுஜன முன்னணியில் தேர்தலில் போட்டியிடும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க, முன்னாள் பிரதி அமைச்சர் சிறிபால கம்லத் மற்றும் வேட்பாளர் ஜகத் சமர விக்கிரம ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.