சற்றுமுன்னர் வெளியான மாணவர்களுக்கான ஓர் முக்கிய அறிவிப்பு (காணொளி)
பாடசாலை மாணவர்கள் பாடசாலைக்குள் முகக்கவசங்கள் அணிய வேண்டியது கட்டாயமில்லை என்று சுகாதார சேவைகள் பணிப்பாள் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
இன்று காலை ஹிரு தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “பத்தரே விஸ்தரே” நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறிகள் குழந்தைகளுக்கு இருந்தால் அவர்களை பாடசாலைகளுக்கு அனுப்ப வேண்டாம் என சுகாதார பணிப்பாளர் நாயகம் பெற்றோர்களிடம் கேட்டுக்கொண்டார்.
இதேவேளை, கொவிட்-19 காரணமாக மூன்று மாதங்களுக்கு பின்னர் பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
கடந்த 29 ஆம் திகதி முதல் பாடசாலைகளில் தொற்று நீக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில் இன்று இரண்டாம் கட்டமாக மாணவர்கள் பாடசாலைக்கு அனுமதிக்கப்படவுள்ளதாக அமைச்சின் செயலாளர் என்.எம்.எம் சித்ராநந்த தெரிவித்துள்ளார்.
இதற்கமைய இன்றைய தினம் 5, 11 மற்றும் 13 ஆம் தரங்களில் கல்வி பயிலும் மாணவர்கள் மாத்திரம் பாடசாலைக்கு அனுமதிக்கப்படவுள்ளனர்.
பாடசாலைகளுக்கு சமூகமளிக்கும் 11 மற்றும் 13 ஆம் தரங்களில்; கல்வி பயிலும் மாணவர்களுக்கு காலை 7.30 முதல் பிற்பகல் 3.30 வரையில் கல்வி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், 5 ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு காலை 7.30 முதல் பிற்பகல் 1.30 வரையில் பாடசாலை நடத்தப்படும் எனவும் குறிப்பிடப்படுகிறது.
பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் சகல ஆசிரியர்களுக்கும் காலை 7.30 க்கு பாடசாலைக்கு சமூகமளிக்க வேண்டிய அவசியம் இல்லை என கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
கற்பிக்கும் பாடநெறி ஆரம்பமாவதற்கு 30 நிமிடங்களுக்கு முன்னர் அவர்கள் பாடசாலைகளுக்கு சமூகமளித்தல் போதுமானது எனவும் கல்வி அமைச்சின் செயலாளர் என்.எம்.எம் சித்ராநந்த தெரிவித்துள்ளார்.