அனைத்து பாடசாலைகளும் இன்று முதல் ஆரம்பம்

அனைத்து பாடசாலைகளும் இன்று முதல் ஆரம்பம்

இரண்டாம் தவணை கற்றல் செயற்பாடுகளுக்காக நாடு முழுவதும் உள்ள சகல பாடசாலைகளும் இன்று (19) திறக்கப்படுகின்றன.

முதலாம் தவணையின் போது காணப்பட்ட சுற்றுநிரூபத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றியே இன்று பாடசாலைகள் ஆரம்பிக்கப்படுவதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்தார்.

கடந்த மார்ச் மாதம் 29 ஆம் திகதி மேல் மாகாண பாடசாலைகளின் கற்றல் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.

இதற்கான சுகாதார வழிகாட்டியானது கடந்த மார்ச் மாதம் 25 ஆம் திகதி வெளியிடப்பட்டிருந்தது.

அந்த சுகாதார வழிகாட்டியின் அடிப்படையிலேயே இன்றைய தினம் சகல பாடசாலைகளும் ஆரம்பிக்கப்படுவதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பல்கலைக்கழகங்களை மீள ஆரம்பிப்பதற்கான சுகாதார வழிகாட்டிகளை அடுத்த வாரத்திற்குள் வெளியிடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அது குறித்து இன்றைய தினம் அனைத்து துணை வேந்தர்களுடன் கலந்துரையாடி தீர்மானிக்கவுள்ளதாக அந்த ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்