அஃப்லரொக்சின் அடங்கிய தேங்காய் எண்ணெய் கொள்கலன்களை ஏற்றிய 'பாபரா' கப்பல் கொழும்பு துறைமுகத்தில் இருந்து புறப்பட்டது
அஃப்லரொக்சின் அடங்கியுள்ளமை என உறுதி செய்யப்பட்ட தேங்காய் எண்ணெய் அடங்கிய கொள்கலன்கள் ஏற்றப்பட்ட 'பாபரா' (BARBARA) என்ற கப்பல், கொழும்பு துறைமுகத்தில் இருந்து புறப்பட்டு சென்றுள்ளது.
சுங்கப்பிரிவின் ஊடக பேச்சாளர் இதனைத் தெரிவித்துள்ளார்.
3 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய, 15 மெற்றிக் டன் தேங்காய் எண்ணெய் அடங்கிய 6 கொள்கலன்கள் இவ்வாறு மீள் ஏற்றுமதி செய்யப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, அஃப்லரொக்சின் இரசாயனம் அடங்கியுள்ளதா? என்பதை ஆய்வு செய்வதற்காக, சந்தைகளில் இருந்து பெறப்பட்ட 125 தேங்காய் எண்ணெய் மாதிரிகளில், போத்தல்களில் அடைக்கப்பட்டு விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த தேங்காய் எண்ணெய் மாதிரிகளின் பெறுபேறுகளே கிடைக்கப்பெறவுள்ளதாக நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.
எழுமாறாக சந்தைகளில் இருந்து பெறப்பட்ட 125 தேங்காய் எண்ணெய் மாதிரிகளில், அஃப்லரொக்சின் இரசாயனம் அடங்கியிருக்கவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ள 109 மாதிரிகள், போத்தல்களில் அடைக்கப்படாத தேங்காய் எண்ணெய்களில் இருந்து பெறப்பட்டவை என அந்த அதிகாரசபை தெரிவித்துள்ளது.
சந்தைகளில், தேங்காய் எண்ணெய் என, வகைப்படுத்தப்பட்டுள்ளவைகள் மாத்திரமே இதுவரை பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
மரக்கறி எண்ணெய் மற்றும் சூரியகாந்தி எண்ணெய் என பெயரிடப்பட்டுள்ள, உணவிற்காக பயன்படுத்தப்படும் எண்ணெய் வகைகள் இவ்வாறான பரிசோதனைக்கு உட்படுத்தப்படவில்லை.
இது தொடர்பில் எமது செய்தி சேவை, நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையிடம் வினவியது.
இதற்கு பதில் வழங்கிய அந்த அதிகார சபையின் அதிகாரி, எதிர்காலத்தில் தேங்காய் எண்ணெய்க்கு மேலதிகமாக, அனைத்து வகையான எண்ணெய்களும் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக குறிப்பிட்டார்.
சந்தைகளில் இருந்து எழுமாறாக பெறப்பட்டிருந்த தேங்காய் எண்ணெய் மாதிரிகளில், அஃப்லரொக்சின் இரசாயனம் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளபோதிலும், எதிர்காலத்தில் எழுமாறாக தேங்காய் எண்ணெய் மாதிரிகள் பெறப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் என நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.