ரிதியகம பால் பண்ணையில் 173 இலட்சம் ரூபாய் வருவாய் இழப்பு

ரிதியகம பால் பண்ணையில் 173 இலட்சம் ரூபாய் வருவாய் இழப்பு

ரிதியகம பால் பண்ணையில் 2017 முதல் 2018 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் 173 இலட்சம் ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளமை கோப் எனப்படும் பொது நிறுவனங்கள் தொடர்பான நாடாளுமன்ற குழு கூட்டத்தில் தெரியவந்துள்ளது.

2015 ஆம் ஆண்டு இறக்குமதி செய்யப்பட்டுள்ள பசுக்களை பராமாரிக்கும் குறித்த பண்ணையில் இடம்பெற்றுள்ள நிதிமுறைகேடுகள் காரணமாக பல சிக்கல் நிலைமைகள் தோன்றியுள்ளன.

இதற்கமைய தேசிய கால்நடைவள அபிவிருத்தி சபையின் சட்ட கட்டமைப்புக்குள், உரிய வழிமுறைகளை பின்பற்றி அதன் செயற்பாடுகளை முன்னெடுக்குமாறு கோப் குழு, அந்த சபைக்கு ஆலோசனை வழங்கியுள்ளது.

2017 முதல் 2020 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் தேசிய கால்நடைவள அபிவிருத்தி சபையின் அறிக்கைகள், நாடாளுமன்றில் சபைப்படுத்தாமை தொடர்பிலும் கோப் குழு கூட்டத்தில் அவதானம் செலுத்தப்பட்டது.

நீண்ட காலமாக 166 பதவிகளுக்கான வெற்றிடங்கள் காணப்படுகின்றமை பிரச்சினைக்குரிய விடயம் என சுட்டிக்காட்டிய கோப் குழு, அதனை நிரப்புவதற்கான நடவடிக்கையினை துரிதப்படுத்துமாறும் குறித்த சபைக்கு அறிவித்துள்ளது.

தேசிய கால்நடைவள அபிவிருத்தி சபையின் பல நிறைவேற்று பதவிகள் பல வருடங்களாக நிரப்பப்படாது உள்ளமை தொடர்பிலும் இதன்போது கோப் குழு, தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளது