தங்கொட்டுவயில் மீட்கப்பட்ட தேங்காய் எண்ணெய்த் தாங்கிகள் தொடர்பில் சுங்க நிவாரண பிரிவு விசாரணை
தங்கொட்டுவ பகுதியில் அண்மையில் மீட்கப்பட்ட சந்தேகத்துக்கிடமான 2 தேங்காய் எண்ணெய்த் தாங்கிகள் தொடர்பில் சுங்க நிவாரண பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
சுங்க நிவாரண பிரிவு வட்டார தகவல்கள் இதனை தெரிவித்துள்ளன.
குறித்த இரண்டு தேங்காய் எண்ணெய்த் தாங்கிகளுக்கான அனுமதியை உணவு கட்டுப்பாட்டாளர் மற்றும் தர நிர்ணய நிறுவகம் வழங்கியுள்ளதா? என்பது தொடர்பிலான விசாரணைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பில், குறித்த எண்ணெய்யை நாட்டுக்குக் கொண்டு வந்த நிறுவனங்களிடம் வாக்குமூலம் பெறப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த இரண்டு எண்ணெய்த் தாங்கிகளிலும் உள்ள தேங்காய் எண்ணெய்யில், புற்றுநோயை ஏற்படுத்தக்ககூடிய அஃப்லரொக்ஸின் (Aflatoxin) இரசாயனம் உள்ளமை நேற்று உறுதியானது.
குறித்த இரண்டு தேங்காய் எண்ணெய்த் தாங்கிகளிலும் இருந்து பெறப்பட்ட தேங்காய் எண்ணெய் மாதிரிகளை பரிசோதனைக்கு உட்படுத்தியதில் இந்த விடயம் உறுதியானதாக சுங்கப் பிரிவின் ஊடகப் பேச்சாளர் சுதத்த சில்வா தெரிவித்திருந்தார்.
குறித்த மாதிரிகள், இலங்கை தர நிர்ணய நிறுவகம், சுகாதார அமைச்சின் உணவு பாதுகாப்புப் பரிசோதனைப் பிரிவு மற்றும் அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களம் ஆகிய நிறுவனங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த 28ஆம் திகதி 55 ஆயிரம் லீற்றர் தேங்காய் எண்ணெய் அடங்கிய இரண்டு தாங்கி ஊர்திகள், தங்கொட்டுவ பகுதியில் வைத்து, காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டது.
குறித்த தேங்காய் எண்ணெய்த் தாங்கி, சுங்கப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்த நிலையில், அதன் மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டிருந்தமை குறிப்பிடத்தககது