அரசாணைப்படி 1000 ரூபா வேதனத்தை வழங்குவது கம்பனிகளின் கடப்பாடு - தொழில் ஆணையாளர்

அரசாணைப்படி 1000 ரூபா வேதனத்தை வழங்குவது கம்பனிகளின் கடப்பாடு - தொழில் ஆணையாளர்

பெருந்தோட்டத் தொழிலாளர்களது நாளாந்த வேதனத்தை 1000 ரூபாவாக நிர்ணயித்து வெளியிடப்பட்ட அரசாணைக்கு எதிரான மனு குறித்த விசாரணை நிறைவடையும் வரையில், தொழிலாளர்களுக்கு பெருந்தோட்ட நிறுவனங்கள் 1000 ரூபாவை நாளாந்த வேதனமாக வழங்க வேண்டும்.

அவ்வாறு வழங்காத பட்சத்தில் அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தொழில் ஆணையாளர் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்துள்ளார்.

குறித்த வர்த்தமானிக்கு எதிராக 20 பெருந்தோட்ட நிறுவனங்கள் மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்துள்ள நிலையில், குறித்த வர்த்தமானிக்கு இடைக்கால தடை விதிக்க நீதிமன்றம் மறுப்புத் தெரிவித்தது.

இதன்படி இந்த மனுமீதான விசாரணை நிறைவடையும் வரையில், தொழிலாளர்களுக்கு நாளாந்தம் 1000 ரூபாவை வேதனமாக வழங்க வேண்டிய கடப்பாடு பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு உள்ளது என்று அவர் கூறியுள்ளார்.

அதேநேரம் தொழிலாளர்களுக்கு நாளாந்த வேதனமாக 1000 ரூபாவை வழங்க தீர்மானித்திருப்பதாக, பெருந்தோட்ட நிறுவனங்கள் நேற்று ஊடக அறிக்கை மூலம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.