தேர்தல் சட்டத்தில் நிலவும் குறைப்பாடுகளை நிவர்த்தி செய்வது தொடர்பான யோசனை நாளை நாடாளுமன்றில்
தற்போதுள்ள தேர்தல் சட்டத்தில் நிலவும் குறைப்பாடுகளை கண்டறிவதற்காக விசேட நாடாளுமன்ற குழுவொன்றை நியமிப்பது தொடர்பான யோசனையொன்று நாளை நாடாளுமன்றில் முன்வைக்கப்படவுள்ளது.
இதற்கமைய, சபாநாயகரால் குறித்த நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் 15 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர்.
6 மாத காலப்பகுதியில் குறித்த குழு பரிந்துரைகளை முன்வைக்கவுள்ளதாக யோசனையில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், மாகாண சபை தேர்தல்களை நடத்துவது தொடர்பான புதிய சட்டமூலம் குறித்து ஆராய்வதற்காக ஆளும் கட்சி தலைவர்களின் கூட்டம் ஒன்று எதிர்வரும் வாரத்தில் இடம்பெறவுள்ளது.
கடந்த 2 வாரங்களுக்கு முன்னர் மாகாண சபை தேர்தல்களை நடத்துவதற்கான புதிய சட்டமூலம் அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டிருந்தது.
தொகுதிவாரி மற்றும் விகிதாசார கலப்பு தேர்தல் முறையில் மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கு இறுதியாக இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது இணக்கம் ஏற்பட்டுள்ளது.
சட்டத்தில் நிலவும் சில குறைப்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடி தீர்மானம் எடுப்பதற்காக குறித்த ஆளும் கட்சி தலைவர்களுக்கு இடையிலான கூட்டத்தினை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், இந்த விடயம் தொடர்பில் தமக்கு இன்னும் எவ்வித அறிவித்தல்களும் வழங்கப்படவில்லை என ஆளும் கட்சி உறுப்பினர்கள் எமது செய்தி சேவைக்கு தெரிவித்தனர்