உந்துருளி விபத்துக்களை தவிர்க்கும் நோக்கில் இன்றும் விசேட சோதனை நடவடிக்கை

உந்துருளி விபத்துக்களை தவிர்க்கும் நோக்கில் இன்றும் விசேட சோதனை நடவடிக்கை

உந்துருளி விபத்துக்களை தவிர்க்கும் நோக்கில், காவல்துறையினரால் கடந்த 31 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கை இன்றும் முன்னெடுக்கப்படுகிறது.

காவல்துறை பேச்சாளர், பிரதிக் காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண இதனைத் தெரிவித்துள்ளார்.

கடந்த 31ஆம் திகதி முதல், முதலாம் திகதிவரையான காலப்பகுதியில், உந்துருளி விதி மீறல்கள் தொடர்பில், 8 ஆயிரத்து 957 பேருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

295 உந்துருளிகள், காவல்துறையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ளன.

மதுபோதையில் உந்துருளி செலுத்திய 264 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அதிக வேகத்துடன் பயணித்த 80 பேருக்கும், தலைக்கவசமின்றி உந்துருளி செலுத்திய ஆயிரத்து 298 பேருக்கும், சாரதி அனுமதித்திரம் தொடர்பில் 875 பேருக்கும், வீதி வீதிமீறல் தொடர்பில் 2 ஆயிரத்து இரண்டு பேருக்கும் எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வேறு தவறுகள் தொடர்பில் 4 ஆயிரத்து 105 பேருக்கும், உருந்துளியில் 3 பேர் பயணித்தமை தொடர்பில் 248 பேருக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

வீதிகளில் பயணிக்கும் வாகனங்களில், சுமார் 56 சதவீதமானவை உந்துருளிகளாகும்.

இதன் காரணமாக, உந்துருகளினால் ஏற்படும் விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரிக்கின்றமையால், அவற்றைக் கட்டுப்படுத்தவதற்காகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

எனவே, உந்துருளி செலுத்துநர்கள் இதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என காவல்துறை பேச்சாளர், பிரதிக் காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண கோரியுள்ளார்