இரசாயனம் அடங்கிய தேங்காய் எண்ணெயை இறக்குமதி செய்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை (காணொளி)

இரசாயனம் அடங்கிய தேங்காய் எண்ணெயை இறக்குமதி செய்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை (காணொளி)

புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய இரசாயனம் அடங்கியுள்ளதாக மூன்று தடவைகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ள தேங்காய் எண்ணெய்யை இறக்குமதி செய்த நபர்களுக்கு எதிராக எடுக்கக்கூடிய உச்சபட்ச சட்ட நடவடிக்கையை மேற்கொள்வதாக நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தரநிர்ணய நிறுவனம் மற்றும் சுகாதார அமைச்சு ஆகியன வழங்கும் பரிந்துரைகளுக்கு அமைய, குறித்த தேங்காய் எண்ணெய்யை கட்டாயம் மீள் ஏற்றுமதி செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.

சுங்கப்பிரிவினால் கண்டறியப்பட்டதற்கு அமைவாக கட்டானை ரிபைன்ட்ரி நிறுவனம், எதிர்வரும் சில தினங்களுக்குள் அதனை மீள் ஏற்றுமதி செய்வதாக அறிவித்துள்ளது.

அத்துடன், அலி பிரதர்ஸ் மற்றும், எதிரிஸிங்க ஆகிய நிறுவனங்களால் இறக்குமதி செய்யப்பட்ட எண்ணெய்யின் அளவு தொடர்பில் சுங்கப்பிரிவினால் ஆராயப்பட்டு வருகின்றது.

இந்த நிறுவனங்கள், இரசாயனம் அடங்கிய தேங்காய் எண்ணெய்யை சந்தைக்கு விநியோகித்திருக்குமானால், அவற்றினால் இறக்குமதி செய்யப்பட்ட தேங்காய் எண்ணெய்யை, மீள் ஏற்றுமதி செய்ய வேண்டும்.

அத்துடன், அந்த நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.