தேங்காய் எண்ணெய் மாதிரிகளை பரிசோதிப்பதற்கு நீண்ட காலம் எடுக்கக்கூடும்
புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய அஃப்லாடொக்ஸின் இரசாயனம் அடங்கிய தேங்காய் எண்ணெய் தொடர்பில் ஆய்வு செய்வதற்கான வசதிகள் அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்திற்கு மாத்திரமே உள்ளதாக பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதனால் நாடளாவிய ரீதியில் சேகரிக்கப்படும் எண்ணெய் மாதிரிகளை பரிசோதிப்பதற்கு நீண்டகாலம் எடுக்க கூடிய நிலை ஏற்படும் என அந்த சங்கத்தின் பொது செயலாளர் மகேந்திர பாலசூரிய எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்.
அத்துடன் அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு இந்த பிரச்சினைக்கான தீர்வினை பெற்றுக்கொடுக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதேவேளை, புற்றுநோய் அபாயமிக்க அஃப்லாடொக்சின் பதார்த்தம் அடங்கிய 1.8 மெற்றிக் டன் எடைகொண்ட இறக்குமதி செய்யப்பட்ட தேங்காய் எண்ணெய் மீள் ஏற்றுமதி செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சுங்க பணிப்பாளர் நாயகம் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் விஜித ரவிபிரிய, கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து இதனைத் தெரிவித்துள்ளார்.
குறித்த தேங்காய் எண்ணெயின் மாதிரிகளுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், அவற்றில் அஃப்லாடொக்சின் பதார்த்தம் உள்ளமை இரண்டாவது முறையாகவும் நேற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.
இதனை அடுத்து அவற்றை திருப்பி அனுப்புவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதன் அடிப்படையில் 1.8 மெற்றிக் டன் தேங்காய் எண்ணெய் உடனடியாக மீளேற்றுமதி செய்யப்படவுள்ளதாக சுங்க பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
குறித்த ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த விடயத்திற்கு பொறுப்பான ராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவன்ன, யாரேனும் குறித்த தேங்காய் எண்ணெய்யை களஞ்சியப்படுத்தி வைத்திருந்தால், அவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார்.
இனிவரும் காலங்களில் உணவு பொருட்களின் மாதிரிகள் குறித்த இறுதி பரிசோதனை அறிக்கை கிடைக்கும் வரையில் அந்த உணவு பொருட்கள் சுங்கத்தில் இருந்து இறக்குமதி செய்த நிறுவனங்களின் களஞ்சியசாலைகளுக்கு, விடுவிக்கப்பட மாட்டாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.