காவல்துறை அதிகாரியால் தாக்கப்பட்ட சாரதியும் கைது!
மஹரகம காவல்துறையை சேர்ந்த போக்குவரத்து பிரிவின் காவல்துறை அதிகாரியினால் தாக்குதலுக்கு உள்ளான பாரவூர்தியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன் சாரதியை தாக்கியமை தொடர்பில் பணி நீக்கம் செய்யப்பட்ட காவல்துறை அதிகாரியும் கைது செய்யப்பட்டுள்ளதுடன் கைதான இருவரையும் இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவுள்ளதாக காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
அதேநேரம் விபத்திற்குள்ளாகியதில் காயமடைந்த மஹரகமை காவல்துறை போக்குவரத்து பிரிவின் பொறுப்பதிகாரி சிகிச்சைகளுக்காக களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
மஹரகம - பன்னிபிட்டிய பகுதியில் வைத்து இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றிருந்த நிலையில் அது குறித்த காணொளி தற்போது சமூகவலைத்தளங்களில் பரவி வருகின்றது.
மஹரகம காவல்துறை போக்குவரத்து பிரிவின் பொறுப்பாதிகாரியை குறித்த பாரவூர்தியின் சாரதி விபத்திற்குள்ளாக்கியமையை அடுத்து இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளமை தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் தாக்குதலை நடத்திய காவல்துறை அதிகாரியை பணியில் இருந்து நீக்குவதற்கு ஆலோசனை வழங்கியதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்