மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் மரணம் தொடர்பில் வெளிவந்த தகவல்கள்!
தலவாக்கலை மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் மிதந்துகொண்டிருந்த நிலையில் கடந்த 25 ஆம் திகதி சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் அடையாளம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தலவாக்கலை காவல்துறை தெரிவித்துள்ளது.
ஆரம்பத்தில் இப்பெண் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டிருந்தனர். எனினும், அதன்பின்னர் மேற்கொண்ட மேலதிக விசாரணைகளுக்கமைய, அப்பெண்ணின் கணவரே அவரை கொலை செய்து பின் சடலத்தை மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் வீசியுள்ளதாக தெரியவந்துள்ளது.
இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ள பெண், அக்கரபத்தனை, டொரிங்டன் தோட்டத்தைச் சேர்ந்த, இரு பிள்ளைகளின் தாயான 28 வயதான பெண்ணொருவர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கணவருடன் ஏற்பட்ட தகராறொன்றின்போது, இப்பெண் தனது கணவனால் தாக்கிக் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் பின்னர் கடந்த 24 ஆம் திகதி இரவு சிற்றூர்ந்தொன்றில் சடலத்தை கொண்டுச் சென்று நீர்த்தேக்கத்தில் வீசியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
சந்தேக நபரான கணவர் அக்கரபத்தனை நகரில் சிற்றூர்ந்து சாரதியாக பணியாற்றி வரும் நிலையில், அவர் கடந்த 24 ஆம் திகதி சிற்றூர்ந்து உரிமையாளரிடம் அனுமதிப்பெற்று, வாகனத்தை தனது வீட்டுக்கு எடுத்துச் சென்று. உயிரிழந்த தனது மனைவியின் உடலை கொண்டுச் சென்றுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேக நபரான கணவர் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டதன் பின்னர், சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
உயிரிழந்த பெண்ணின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக நுவரெலியா பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள அதேவேளை, சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தலவாக்கலை காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்