நேற்று அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களில் அதிகமானோர் யாழ்ப்பாண மாவட்டத்தில்
நாட்டில் நேற்று கொவிட்-19 தொற்றுறுதியான 249 பேரில் அதிகமானோர் யாழ்ப்பாண மாவட்டத்திலேயே அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கொவிட்-19 பரவல் தடுப்பு தேசிய செயற்பாட்டு மையம் விடுத்துள்ள நாளாந்த அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய யாழ்ப்பாண மாவட்டத்தில் நேற்றைய தினம் 63 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியானதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு தொற்றுறுதியானவர்களில் யாழ்ப்பாண சுகாதார வைத்திய அதிகாரி பிரிவை சேர்ந்த 29 கோப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவை சேர்ந்த 21 பேரும் அடங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை கொழும்பில் 42 பேருக்கும், கம்பஹாவில் 33 பேருக்கும் நேற்று தொற்றுறுதியானது.
அத்துடன் வெளிநாட்டில் இருந்த நாடு திரும்பிய 12 பேருக்கும் நேற்று தொற்றுறுதியானதாக கொவிட்-19 பரவல் தடுப்பு தேசிய செயற்பாட்டு மையம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய நாட்டில் தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 92 ஆயிரத்து 88 ஆக அதிகரித்துள்ளது.
அவர்களில் 88 ஆயிரத்து 623 பேர் இதுரையில் குணமடைந்துள்ளனர்.
இந்தநிலையில் தொற்றுறுதியான 2 ஆயிரத்து 904 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேவேளை, யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா நோக்கி பேரூந்தில் பயணிக்கும் பயணிகளுக்கு வவுனியாவில் எழுமாறாக பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படுகின்றது.
யாழ்ப்பாணத்தில் கொவிட்-19 தொற்று அதிகரித்துள்ள நிலையில் வவுனியாவில் தொற்று பரவுவதை தடுக்கும் நோக்கில் இந்த செயற்பாடு முன்னெடுக்கப்படுவதாக எமது செய்தி தொடர்பாளர் குறிப்பிட்டார்