இலங்கை கடற்பரப்பில் அத்துமீறிய இந்திய மீனவர்கள்! அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கை
இலங்கை கடற்பரப்பிற்குள் சட்ட விரோதமாக மீன் பிடிப்பில் ஈடுபட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய திருகோணமலையில் கைது செய்யப்பட்ட 20 மீனவர்கள் இன்று வெள்ளிக்கிழமை விடுதலை செய்யப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் கப்டன் இந்திக டி சில்வா தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்ட 14 மீனவர்கள் நேற்று வியாழக்கிழமை கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் , இவர்கள் உள்ளடங்களாக மன்னாரில் கைது செய்யப்பட்ட ஏனைய 20 மீனவர்களையும் அரசாங்கத்தின் தீர்மானத்திற்கமைய விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கடற்படை பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
கடந்த புதன்கிழமை சட்ட விரோத மீன்பிடி நடவடிக்கைகள் தொடர்பில் இலங்கை கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்புக்களில் 54 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டதோடு , 5 படகுகளும் கைப்பற்றப்பட்டன.
இது தொடர்பில் கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்திற்கு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கைது செய்யப்பட்ட மீனவர்கள் தொடர்பில் துரித நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்று உயர்ஸ்தானிகராலயம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.