சந்தையில் பெறப்பட்ட தேங்காய் எண்ணெய் மாதிரிகள் பரிசோதனைக்கு!

சந்தையில் பெறப்பட்ட தேங்காய் எண்ணெய் மாதிரிகள் பரிசோதனைக்கு!

சந்தைகளில் இருந்து பெறப்பட்டுள்ள தேங்காய் எண்ணெய்யின் மாதிரிகள் மேலதிக பரிசோதனைகளுக்காக கைத்தொழில் தொழிநுட்ப நிறுவகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.

நாடாளுமன்றில் கருத்துரைத்த வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன இதனை தெரிவித்துள்ளார்.

புற்றுநோயை ஏற்படுத்த கூடிய பாவனைக்கு உதவாத தேங்காய் எண்ணெய் சந்தைக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற கருத்து தொடர்பில் பதிலளித்த போது அமைச்சர் பந்துல குணவர்தன இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

தேங்காய் எண்ணெய் இறக்குமதி செய்யப்படுகின்ற சந்தர்ப்பங்களில் இறக்குமதி செய்யப்பட்ட உடனேயே பரிசோதனை செய்ய முடியாமையால் அவை எண்ணெய் களஞ்சியசாலைக்கு அனுப்பப்படுகின்றன.

களஞ்சியசாலைகளுக்கு அனுப்பப்பட்ட பின்னர் அது தொடர்பில் இரண்டு தரப்பினரால் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும்.

இலங்கை தர நிர்ணய நிறுவனத்தினாலும் சுகாதார திணைக்களத்தின் உணவு தொடர்பான பிரிவினாலும் இந்த பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

குறித்த 13 கொள்கலன்களிலும் மனித பயன்பாட்டு உபயோகப்படாத புற்று நோய் ஏற்படுத்த கூடிய திரவம் அடங்கியுள்ளமையால் அவற்றை வர்த்தகத்திற்கு பயன்படுத்தாது மீள் ஏற்றுமதி செய்யுமாறு அறியப்படுத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து குறித்த எண்ணெய் தொகையை விடுவிக்காமல் களஞ்சியசாலையிலேயே தடுத்து வைக்குமாறு சுங்க பிரிவின் பணிப்பாளர் நாயகம் அறிவுறுத்தியுள்ளார்.

நுகர்வோர் அதிகார சபையினால் குறித்த எண்ணெய்கள் வைக்கப்பட்டுள்ள களஞ்சியசாலை முத்திரையிடப்பட்டுள்ளது.

எனவே, அங்கிருந்து தேங்காய் எண்ணெய் விநியோகிக்க முடியாது.

தற்போது அதன் மாதிரிகள் மாலபேயிலுள்ள கைத்தொழில் தொழிநுட்ப நிறுவகத்திற்கு அனுப்ப்பட்டுள்ளதாக அமைச்சர் பந்துலு குணவர்தன தெரிவித்துள்ளார்