போலியான கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றிய பிரதம நிறைவேற்று அதிகாரி சிக்கினார்!
சுமார் 23 இலட்சத்துக்கும் அதிக பெறுமதியுடைய பணத்தை கொள்ளையிடப்பட்டுள்ளதாக ஹெயியன்துடுவ காவல் நிலையத்துக்கு தனியார் நிறுவனம் ஒன்றின் பிரதம நிறைவேற்று அதிகாரியினால் அளிக்கப்பட்ட முறைப்பாட்டை விசாரித்தபோது, அச்சம்பவம் குறித்த முறைப்பாட்டாளரினாலேயே அரங்கேற்றப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளதாக காவல்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
முறைப்பாட்டை அளித்த நிறைவேற்று அதிகாரி, தான் பணியாற்றும் நிறுவனத்துக்கு உரித்தான பணத்தை தனது தனிப்பட்ட தேவைகளுக்காக செலவிட்டதை மூடிமறைப்பதற்காக இவ்வாறு போலியான கொள்ளை சம்பவமொன்றை சித்தரித்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
தான் இந்த பணத்தை வங்கியில் வைப்பிலிட எடுத்துச்சென்ற வேளையில் உந்துருளியொன்றில் வந்த இருவர் அப்பணத்தை அபகரித்துச் சென்றுள்ளதாக சந்தேகநபரான நிறைவேற்று அதிகாரி காவல் நிலையத்துக்கு முறைப்பாடு அளித்துள்ளார்.
இந்நிலையில், மேற்படி முறைப்பாட்டாளரும் அவரது மனைவியின் சகோதரனும் இணைந்து இந்த போலி கொள்ளை சம்பவத்தை திட்டமிட்டுள்ளதாக விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
இந்த கொள்ளைச் சம்பவத்தில் பணத்தைக் கொள்ளையிடுவது போன்று நடிப்பதற்காக இரு நபர்களுக்கு பணம் செலுத்தப்பட்டுள்ளதாகவும், சம்பவம் இடம்பெற்ற வேளையில் குறித்த பணப்பையில் 50 ஆயிரம் ரூபா பெறுமதியான பணம் மாத்திரமே இருந்துள்ளது என்றும் தெரியவந்துள்ளது.
இந்த சித்தரிக்கப்பட்ட கொள்ளை சம்பவத்துக்காக ஈடுபடுத்தப்பட்ட உந்துருளியை தேடி காவல்துறை விசாரணைகளை முன்னெடுத்துள்ள அதேவேளை, முறைப்பாட்டாளரான நிறைவேற்று அதிகாரி மற்றும் அவரது மனைவியின் சகோதரன் ஆகியோர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர், பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்