யாழ். விவசாயிகளால் தம்புள்ளை சந்தையில் மரக்கறி விலைகளில் பாரிய வீழ்ச்சி
யாழ்ப்பாணத்திலுள்ள விவசாயிகள் தங்கள் அறுவடைகளை தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு கொண்டு வருவதால் அங்கு மரக்கறிகளின் விலைகள் வீழ்ச்சியடைந்திருப்பதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.
யாழ்ப்பாணத்திலிருந்து பெருமளவான மரக்கறிகள் இன்று (25) தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளமையால் இவ்வாறு பச்சை மிளகாய், கறி மிளகாய், உள்ளூர் உருளைக்கிழங்குகள் , பீட்றுாட், பூசணி, சிறிய வெங்காயம் போன்ற மரக்கறிகளின் விலை குறைவடைந்திருப்பதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.
சென்ற வாரம் உள்ளூர் உருளைக்கிழங்கின் விலை 100 ரூபாய்க்கும் அதிகமாக விற்பனையானதோடு இன்றைய தினம் அதன் விலை 70 - 80 ரூபாவுக்குமிடையில் காணப்பட்டுள்ளது.
அத்தோடு 200 - 220 ரூபாவுக்குமிடையில் விற்பனையாகிய பச்சை மிளகாயின் விலை இன்றைய தினம் 130-140 ரூபா வரை வீழ்ச்சியடைந்துள்ளது.
இன்றைய தினம் ஒரு கிலோ கிராம் யாழ். பூசணியின் விலை 50 - 55 ரூபாவுக்கிடையில் காணப்பட்டுள்ளது.
வரும் நாட்களில் யாழிலிருந்து பெருமளவான மரக்கறி வகைகள் தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு கிடைக்கப்பெறவிருப்பதால் மரக்கறிகளின் விலை மேலும் குறைவடையக்கூடுமென வர்த்தகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இவ்வாறு யாழ்ப்பாணத்திலிருந்து கிடைக்கப்பெறும் மரக்கறி வகைகளுக்கு நாட்டின் ஏனைய பிரதேசத்திலுள்ள நுகர்வோரிடமிருந்து அதிக கேள்வி நிலவுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இறக்குமதி செய்யப்படுகின்ற உருளைக்கிழங்கு மற்றும் வெங்காயத்தின் விலையை விட யாழ். விவசாயிகள் குறைந்த விலையில் காய்கறிகளை விற்பனை செய்கிறார்கள். இதனால் நுகர்வோர் வரவிருக்கும் பண்டிகைக் காலங்களில் குறைந்த விலையில் காய்கறிகளை கொள்வனவு செய்ய முடியும் என்று வர்த்தகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்