பசறையில் விபத்துக்குள்ளான பேருந்து வழமையான நேரத்தில் புறப்படவில்லை
பசறை-13ஆம் கட்டை பகுதியில் அண்மையில் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளான பேருந்து வழமையான நேரத்திற்கு லுனுகலையில் இருந்து புறப்படவில்லை என தெரியவந்துள்ளது.
இந்த விபத்து தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட மூவரடங்கிய குழு இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பான அறிக்கை போக்குவரத்து அமைச்சர் காமினி லொக்குகேவிடம் கையளிக்கப்பட்டுள்ளதாகவும், விபத்துக்குள்ளான பேருந்து லுனுகலையில் இருந்து புறப்பட வேண்டிய நேரத்திற்கு முன்னதாகவே புறப்பட்டு சென்றுவிட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
விபத்து இடம்பெற்ற நாளன்று பேருந்து லுனுகலையில் இருந்து காலை 6.50க்கு புறப்பட வேண்டியிருந்தாலும் காலை 6.30 மணிக்கெல்லாம் புறப்பட்டு சென்றுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்றைய தினம் கொழும்பு நோக்கி செல்லும் பேருந்துக்கள் குறைவாக இருந்ததனால் இவ்வாறு குறித்த பேருந்து முன்னதாகவே புறப்பட்டதாக போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், விபத்து இடம்பெற்ற பகுதியில் பல நாட்களாக அகற்றப்படாமல் இருந்த கற்பாறையை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது