வட கொரிய அதிபர் வெளியிட்டுள்ள பகிரங்க அறிவிப்பு

வட கொரிய அதிபர் வெளியிட்டுள்ள பகிரங்க அறிவிப்பு

கொரோனாவை தாங்கள் வென்றுவிட்டதாக வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் அறிவித்துள்ளார்.

புதிய கொரோனா வைரஸைத் தடுத்து நிறுத்துவதில் தனது நாடு பிரகாசமான வெற்றியைப் பெற்றுள்ளது என்று வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன் பாராட்டியதாக அந்நாட்டு அரசுக்கு சொந்தமான கே.சி.என்.ஏ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

தொழிலாளர் கட்சியின் பொலிட்பியூரோ கூட்டத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் பற்றி கிம் ஜாங் உன் ஆலோசனை நடத்தினார்.

இந்த கூட்டத்திற்கு பிறகு, உலக அளவில் கொரோனா வைரஸ் பேரழிவை ஏற்படுத்தி வரும் நிலையிலும் கொடிய கொரோனா வைரசை வடகொரியாவில் கால்பதிக்க விடாமல் தடுத்துவிட்டோம் என்று கிம் ஜாங் அன் கூறியதாக செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

சீனாவில் கொரோனா பரவத்தொடங்கியதும் வடகொரியா தனது எல்லையை மூடியது. சீனாவில் இருந்து வந்த ஆயிரக்கணக்கானோரைத் தனிமைப்படுத்தியது. மர்ம தேசமாக அறியப்படும் வடகொரியாவில் கொரோனா வைரஸ் அதிக அளவு இருப்பதாக பரவலாக சொல்லப்பட்ட போதிலும் அது பற்றிய எந்த செய்தியும் இதுவரை வெளியாகாமல் இருந்தது.

தற்போது கிம் ஜாங் உன் உரை, வடகொரியாவில் கொரோனா பாதிப்பு பெரிய அளவில் இல்லை என்று கருதும் வகையில் உள்ளது.

இதுநாள் வரை கொரோனா தொற்று பற்றிய எந்த தகவலையும் வடகொரியா வெளியிடாவிட்டாலும், அந்நாட்டில் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தது.

பாடசாலைகள், கல்லூரிகள் மூடப்பட்டன. அண்டை நாடுகளில் இருந்து புதிய தொற்றுக்கள் பரவ வாய்ப்பு உள்ளதால், உச்சபட்ச விழிப்புணர்வுடன் தொடர்ந்து இருக்க வேண்டும் என்று கிம் ஜாங் உன் வலியுறுத்தியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.