கொரோனா பரவல் எதிரொலி: பிரசாரத்துக்கு கட்டுப்பாடு விதிக்க தமிழக சுகாதாரத்துறை பரிந்துரை

கொரோனா பரவல் எதிரொலி: பிரசாரத்துக்கு கட்டுப்பாடு விதிக்க தமிழக சுகாதாரத்துறை பரிந்துரை

கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவது தமிழக தேர்தல் களத்திலும் பாதிப்பை ஏற்படுத்த தொடங்கி இருக்கிறது.

தேர்தல் பிரசாரத்தின் போது பொதுக்கூட்டங்கள் நடைபெறும் இடங்களில் மக்கள் அதிக அளவில் கூடுவதால் கொரோனா தொற்று மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்து இருந்தனர்.

இதனைத் தொடர்ந்து தேர்தல் பிரசாரங்களுக்கு கடும் கட்டுப்பாடு விதிப்பதுடன் முக்கிய தலைவர்கள் பிரசார கூட்டங்களுக்கு மட்டும் அனுமதி அளிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தை சுகாதாரத்துறை அதிகாரிகள் வலியுறுத்தி உள்ளனர்.

கொரோனா தொடர்பாக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மேற்கொண்ட போதிலும் தேர்தல் நேரத்தில் அதை கட்சியினர் கண்டு கொள்ளாமல் இருப்பதால் சுகாதாரத்துறை அதிகாரிகள் இதுபோன்ற நடவடிக்கைக்கு பரிந்துரை செய்துள்ளனர்.

இது தொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

தமிழகத்தில் படிப்படியாக குறைந்து வந்த நோய் தொற்று தேர்தல் பிரசார பொதுக்கூட்டங்களால் அதிகரிக்க தொடங்கி உள்ளது. இதையடுத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளோடு முக்கிய ஆலோசனை நடத்தப்பட்டது.

இந்த ஆலோசனையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்