கால்பந்தாட்ட அரங்கு நிர்மாணத்தின் போது 6,000 வெளிநாட்டு பணியாளர்கள் பலி!

கால்பந்தாட்ட அரங்கு நிர்மாணத்தின் போது 6,000 வெளிநாட்டு பணியாளர்கள் பலி!

உலக்கிண்ண கால்பந்தாட்ட போட்டிகள் இடம்பெற்ற கட்டார் விளையாட்டரங்கு நிர்மாணத்தின் போது ஆயிரக்கணக்கான வெளிநாட்டு பணியாளர்கள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

கடந்த 10 வருடங்களில் இந்த நிர்மாண பணிகளின் போது  6000க்கும் அதிகமான  வெளிநாட்டு பணியாளர்கள் உயிரிழந்துள்ளதாகவும் இவர்களில் இலங்கையர்கள் 557 பேரும் அடங்குவதாகவும் அந்த ஊடகம் தெரிவித்துள்ளது.

இந்த பணியாளர்கள் அதிக உஷ்ணம் நிறைந்த சூழலில் உயரமான இடங்களில் பணியாற்றி வந்த போது தவறி வீழ்ந்து உயிரிழந்த சம்பவங்களும் பதிவாகியுள்ளன.

மேலும் சில பணியாளர்கள் மேற்படி சூழலால் தமக்கேற்பட்ட நோய் நிலைமைகளால் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

எனினும்,பெரும்பாலான சந்தர்ப்பங்களில் பிரேத பரிசோதனைகள் இடம்பெற்றிருக்கவில்லை எனவும் தெரியவந்துள்ளது.

அவ்வாறே சில மரணங்கள் இயற்கை மரணங்களாகவும் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

இது தொடர்பில் நாம் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பிரதி  பொது முகாமையாளர் மங்கள ரந்தெனியவிடம் வினவிய போது, இந்த அறிக்கை தொடர்பில் கட்டார் அரசாங்கத்துடன் பேச்சுவார்ததைகளை மேற்கொள்ள எதிர்பார்த்ததாக தெரிவித்தார்.

அவ்வாறே, மிக விரைவில் இது தொடர்பில் கண்டறிந்து அறிக்கை சமர்ப்பிப்பதாகவும் அவர் தெரிவித்தார்