பசறை விபத்து:டிப்பர் ரக வாகனத்தின் சாரதியை தேடும் காவல்துறை
பசறை - 13ஆம் கட்டை பகுதியில் இடம்பெற்ற விபத்து தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இந்த விபத்தின் பின்னர் சம்பவ இடத்தில் இருந்து தப்பிச்சென்ற டிப்பர் ரக வாகனத்தின் சாரதியை தேடும் நடவடிக்கைகளை காவல்துறை அதிகாரிகள் முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இன்று காலை இடம்பெற்ற இந்த விபத்தில் 09 ஆண்களும் 05 பெண்களும் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்களில் ஆசிரியர் ஒருவரும் தம்பதியினரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன், விபத்தில் மரணித்தவர்களில், ஒருவரின் சடலத்தை அடையாளம் காண முடியாமல் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கொரோனா பரிசோதனைகளுக்காக சரீரங்களில் மாதிரிகள் பெறப்பட்டுள்ளதுடன் அவற்றின் முடிவுகளை விரைவில் வெளியிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.
அத்துடன் மரண பரிசோதனைகளுக்காக பசறை வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்த சரீரங்கள் பதுளை வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளன