இலங்கை - பங்களாதேஷ் பிரதமர்களுக்கு இடையில் கலந்துரையாடல்

இலங்கை - பங்களாதேஷ் பிரதமர்களுக்கு இடையில் கலந்துரையாடல்

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் பங்களாதேஷ் பிரதமர் ஷெயிக் ஹசீனாவுக்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று இடம்பெற்றது.

இரண்டு நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு நேற்று பங்களாதேஷ் நோக்கி பயணித்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று அந்த நாட்டு பிரதமரை சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.

இந்த சந்திப்பு டாக்காவில் இன்று முற்பகல் இடம்பெற்றுள்ளது.

இதன்போது போது பொருளாதாரம், முதலீடு, சந்தை, தொழிநுட்பம், விவசாயம், கடற்றொழில் கைத்தொழில் மற்றும் அரசியல் உறவு ஆகியவற்றை தொடர்ந்து முன்னெடுத்து செல்வது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக பிரதமரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

வலய பொருளாதார ஒத்துழைப்பினை மேம்படுத்தும் வகையில் வலயத்துக்கு பொருத்தமான பொருளாதாரத்தை மேம்படுத்தும் யோசனைகளை பங்களாதேஷ் பிரதமர், தூதுகுழுவினரின் கவனத்திற்கு கொண்டு சென்றார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, அந்த யோசனைகள் தொடர்பில் அவதானம் செலுத்தியுள்ளதாக அவரது ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

உயர் கல்வியை பெற்றுக் கொள்ள இலங்கை மாணவர்கள் பங்களாதேஷிற்கு வருகை தருமாறு அந்த நாட்டு பிரதமர் இதன்போது அழைப்பு விடுத்துள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையில் விமான சேவையை விரிவுப்படுத்தி சுற்றுலாத்துறை, கைத்தொழில் மற்றும் சந்தைப்படுத்தல் ஆகிய துறைகளை முன்னேற்றுவது குறித்து இந்த பேச்சுவார்த்தையின் போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

அடுத்த வருடம் இலங்கைக்கு உத்தியோகப்பூர்வமான விஜயத்தை மேற்கொள்ளுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, பங்களாதேஷ் பிரதமருக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவு அடுத்த ஆண்டு 50 ஆவது வருடத்தை எட்டவுள்ள நிலையில் அதனை கொண்டாடும் வகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இந்த அழைப்பு விடுத்துள்ளதாக அவரது ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

கடந்த காலங்களில் பங்களாதேஷிற்கும், இலங்கைக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தங்களை சிறந்த முறையில் செயற்படுத்துவதற்கு ஒன்றிணைந்த ஆலோசனை ஆணைக்குழுவை மீண்டும் நடைமுறைப்படுத்துவது குறித்து இந்த பேச்சுவார்த்தையில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் பங்களாதேஷ் மற்றும் இலங்கைக்கு இடையில் மத்திய வங்கியின் சேவை, தொழிநுட்பத்துறை கட்டமைப்பை பரிமாற்றிக் கொள்ளல் குறித்து கவனம் செலுத்தப்பட்டது.

பயங்கரவாதம் மற்றும் போதைப்பொருள் வியாபாரம் ஆகியவற்றை முழுமையாக இல்லாதொழிக்க தேவையான நடவடிக்கைகளை செயற்படுத்த இரு நாடுகளும் இணக்கம் தெரிவித்துள்ளன.

இருதரப்பு பேச்சுவார்த்தை நிறைவாக இலங்கை மற்றும் பங்களாதேஷூக்கும் இடையில் ஆறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன.

இளைஞர் விவகாரத்தை அபிவிருத்தி செய்தல், விவசாயத்துறை, திறன் அபிவிருத்தி பறிமாற்றல், சுகாதார தாதிகள் சேவை பறிமாற்றம், அனைத்துலக ஒத்துழைப்பு கல்வி மற்றும் 2021 முதல் 2025 வரையிலான அனைத்து கலாசார பறிமாற்ற செயற்திட்டம் ஆகிய விடயங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதாக பிரதமரின் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது