நக்கிள்ஸ் மலைத்தொடரில் வல்லப்பட்டை தாவரங்கள் பாரியளவில் அழிப்பு

நக்கிள்ஸ் மலைத்தொடரில் வல்லப்பட்டை தாவரங்கள் பாரியளவில் அழிப்பு

உலக மரபுரிமையாக யுனெஸ்கோ அமைப்பினால் அறிவிக்கப்பட்ட நக்கிள்ஸ் மலைத்தொடரின் மாத்தளை – புவக்பிட்டியவுக்கு இடைப்பட்ட முக்கிய வலயமான துனமடுலா ஓயாவுக்கு அருகில் உள்ள பகுதியில் வல்லப்பட்டை தாவரங்கள் பாரியளவில் அழிக்கப்படுவதாக பிரதேச மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

வல்லப்பட்டை தாவரங்கள் வெட்டப்பட்டு அவற்றின் பாகங்களை கொண்டு செல்லும் வியாபாரம் இடம்பெறுவதாகவும் மக்கள் குறிப்பிடுகின்றனர்.

எவ்வாறாயினும் அதிகாரிகள் இதுவரையில் நடவடிக்கை எடுக்காமை காரணமாக நக்கிள்ஸ் வனப்பகுதியின் வல்லப்பட்டை தாவரங்கள் பாரியளவில் வர்த்தகர்களின் பிடியில் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தநிலையில் சுற்றாடல் சார்ந்த குற்றச்செயல்கள் தொடர்பில் அறிவிப்பதற்கு எதிர்வரும் நாட்களில் விசேட தொலைபேசி இலக்கத்தை அறிமுகப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாக காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறை அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

அதுவரையில் சுற்றாடல் சார்ந்த குற்றச்செயல்கள் தொடர்பில் 1997 என்ற இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்தி அறிவிக்க முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன் குற்றச்செயல்கள் தொடர்பில் முக்கிய தகவல்களை வழங்குபவர்களுக்கு பரிசில்கள் வழங்கப்படும் எனவும் காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறை அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்